அமைச்சர்களுக்கு வழங்கும் ஆடம்பர செலவை விவசாயத்திற்கு வழங்குங்கள் : சாணக்கியன் அதிரடி

சுதந்திரமே இல்லாத நாட்டில் சுதந்திர தினத்துக்கும் அமைச்சர்களின் ஆடம்பரத்திற்கும் செலவழிக்கும் பணத்தை அரசு விவசாயத்திறகு செலவு செய்தால் விவசாயிகளினதும் நாட்டு மக்களினதும் வாழ்க்கைத்தரம் உயர்வடையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (22.03.2024) இடம்பெற்ற விவசாயம் தொடர்பான பிரேரணையின் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “வடக்கு – கிழக்கில் வாழும் எமது மக்கள் விவசாயம், கால்நடை, கடற்றொழிலினை நம்பி தமது வாழ்வாதாரத்தினை நடத்திச் செல்கின்றனர்.

அந்தவகையில், கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தினை உதாரணமாக வைத்து நான் சில விடயங்களை கூறுகின்றேன்.

விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு என்பன ஒன்றாக பயணிக்கும் துறைகளாக காணப்படுகின்ற வேளை விவசாயிகளுக்கு கடந்த போகத்திலே மிக முக்கிய பிரச்சினையாக காணப்பட்டது மேய்ச்சல் தரை நிலப் பிரச்சனை.

மயிலத்தமடுவிலிருந்து 150 நாட்களுக்கும் மேலதிகமாக போராட்டங்கள் நடை பெறுகின்றன. ஆனால் அரசாங்கத்தினுடைய இனவாத செயற்பாட்டின் காரணமாக எங்களது மேய்ச்சல் தரையை வர்த்தமானி ஊடாக அறிவிக்காமல் பெரும்பான்மை இனத்தினை குடியேற்றி; விவசாயம் மேற்கொள்ள முன்வந்தமையினால் இன்று கால்நடை வைத்திருக்கும் எமது தமிழ் மக்கள் கால்நடைகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோர் விவசாயத்தை ஆரம்பிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

இயற்கை அனர்த்தங்கள்
விவசாயிகள் உரத்தினை கொள்வனவு செய்தாலும் அறுவடை செய்யும் காலப்பகுதியின் போது யானைகளின் தொல்லை காணப்படுவதோடு உயிரிழப்பும் ஏற்படுகின்றது.

யானை வேலிகளை அமைப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது வரை 10 கிலோமீற்றர் யானை வேலியை கூட அமைக்கவில்லை. இராப்பகலாக கண்விழித்து யானைகளிலிருந்து நிலத்தினைப் பாதுகாத்தால் இயற்கை அனர்த்தங்களின் பிரச்சினை காணப்படுகின்றது.

ஆனால், இன்று வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கவில்லை. இவ்வாறு கஷ்டத்துக்கு மத்தியிலும் எமது விவசாயிகள் நெல்லைப் பெற்றாலும் அதனை உரிய விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு இந்த நாட்டு அரசாங்கம் இல்லை.

நெல் கொள்வனவு
நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கத்திடம் பணமில்லை என்றால் இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கியுள்ள ஆடம்பர செலவுகளை குறைத்தால் நெல்லினை கொள்வனவு செய்ய வேண்டிய பகுதியளவு பணத்தினை பெற முடியும்.

மேலும், சுதந்திரமற்ற இலங்கையில் சுதந்திர தினம் கொண்டாட செலவழிக்கப்பட்ட பணத்தினை வைத்து நெல் கொள்வனவு செய்வதற்காக ஒதுக்க முடியும்.

இந்நிலையில், அம்பாந்தோட்டை பிரதேசத்தில் நெல் கொள்வனவிற்காக சில உத்திகள் கையாளப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் எமது மாவட்டத்தில் எவ்வித திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படவில்லை எனவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.