யாழில் இராணுவத்தின் வெடிபொருள் வெடித்து சிதறியதில்- சிறுவர்கள் உட்பட 8 பேர் படுகாயம்

யாழ்ப்பாணம் குருநகரில் ரி என் ரி ரக வெடிபொருளை கிறைண்டரில் போட்டு அரைத்தவேளை அது வெடித்துச் சிதறியதால் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.

டைனமட் தயாரிக்கும் நோக்கில் நேற்றிரவு மீனவர் ஒருவர் குறித்த வெடிபொருளை தூளாக்க முயன்றுள்ளார்.எனினும் அது அதிக கல்லுத் தன்மையாக காணப்பட்டுள்ளது.

இதனால் அந்த வெடிபொருளை கிறைண்டரில் போட்டு அரைத்துள்ளார்.இதன்போது அது பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இந்த அனர்த்தத்தில் சிக்கி வீட்டிலிருந்த எண்மர் படுகாயமடைந்தனர்.இவர்கள் அனைவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்களில் மூவர் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களாவர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.