ஒசாமாவை கொல்ல எதிர்கொண்ட சவால்கள் – இரகசியத்தை வெளியிட்ட பராக் ஒபாமா

2009ஆம் ஆண்டு மே மாதம் அது. அன்று, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், மிக முக்கிய ஆலோசனைகள் நடக்கும் சிச்சுவேஷன் ரூமில், கூட்டம் முடிந்தவுடன், அதிபர் ஒபாமா தனது ஆலோசகர்களில் சிலரை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.

இந்த சிறப்பு அலோசனைக்கூட்டத்தில், வெள்ளை மாளிகையின் நிர்வாகத் தலைவர் ரஹ்ம் இமானுவேல், சிஐஏ இயக்குநர் லியோன் பனெட்டா மற்றும் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் டாம் டானிலோன் ஆகியோர் இருந்தனர்.

ஒசாமா பின்லேடனைத் தேடும் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் இது குறித்த செயல்பாடுகளுக்கான அறிக்கை ஒவ்வொரு முப்பது நாட்களுக்கு ஒரு முறை தனது மேசைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் ஒபாமா அவர்களிடம் கூறினார்.

பராக் ஒபாமா தனது சுயசரிதையான ‘ தி ப்ராமிஸ்ட் லேண்ட்’ -ல், “9/11 இன் 9 வது ஆண்டு நிறைவுக்கு ஒரு நாள் முன்பு, சிஐஏ இயக்குநர் லியோன் பனெட்டாவும் அவரது துணை அதிகாரியான மைக் மோரலும் என்னைச் சந்திக்க நேரம் கேட்டனர். அப்போது, ஒசாமா பின்லேடனைப் பற்றிய ஆரம்பகால துப்பு திரட்டியுள்ளதாக லியோன் கூறினார்” என்று எழுதியுள்ளார்.

“நமது உளவாளிகள், அபு அஹ்மத் அல் குவைதி என்ற ஒருவரைக் கண்டுபிடித்துள்ளனர், அவர் அல் கய்தாவுக்கு தூதராக பணியாற்றுகிறார், ஒசாமா பின்லேடனுடன் நெருங்கிய உறவைக் கொண்டவர். நமது உளவாளிகள் அவரது தொலைபேசி மற்றும் அன்றாட நடவடிக்கைகளை கண்காணித்துள்ளனர்.

இதன் மூலம், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 35 கி.மீ தூரத்தில் உள்ள அபோட்டாபாத் நகரின் புறநகரில் உள்ள ஒரு பெரிய வளாகத்தை அவர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த இடத்தின் அமைப்பையும் அளவையும் பார்த்தால், அல்-கய்தாவுடன் தொடர்புடைய ஒரு பெரிய நபர் அங்கு வசிப்பதாகத் தெரிகிறது என்று மைக் கூறினார். ”

வளாகத்திற்குள் வேகமாக நடைபழகிய ‘த பேஸர்’

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, டிசம்பர் 14, 2009 அன்று, லியோன் மற்றும் மைக் இணை, மீண்டும் பராக் ஒபாமாவை சந்திக்க வந்தனர்.

இந்த நேரத்தில் அவர்களுடன் சிஐஏ அதிகாரி ஒருவரும் ஆய்வாளர் ஒருவரும் இருந்தனர். இந்த அதிகாரி சிஐஏவின் பயங்கரவாத எதிர்ப்பு மையம் மற்றும் அமெரிக்காவின் பின்லேடன் தேடுதல் படைத் தலைவராக இருந்தார். இந்த இரண்டு நபர்களும் ஒபாமாவிற்கு அபோட்டாபாதின் அந்த வளாகத்தைக் கண்டறிய உதவிய அனைத்து உண்மைகளையும் தெரிவித்தனர்.

முன்னாள் சிஐஏ இயக்குநர் லியோன் பனெட்டா, தனது சுயசரிதை ‘வர்த்தி ஃபைட்ஸ்'(‘Worthy Fights’) இல் , “இந்த வளாகம் சுற்றியுள்ள கட்டடங்களை எல்லாம் விட மிகப்பெரியது. அடுத்த குடியிருப்பைக் காட்டிலும் சுமார் எட்டு மடங்கு பெரியது. இது இப்ராஹிம் மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமானது.

இவர்களின்சொத்து விவரங்களைப் பார்த்தால், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சொத்தை சொந்தமாக வைத்திருக்கக்கூடிய நிலையில் அவர்கள் இல்லை.

ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், உரிமையாளராக இருந்தபோதிலும், இப்ராஹிம் சகோதரர்கள், கட்டடத்தின் முக்கிய பகுதியில் தங்காமல் வளாகத்தில் இருக்கும் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார்கள். ” என்று குறிப்பிட்டுள்ளார்.

“இந்த கட்டடத்தில் மூன்று தளங்கள் இருந்தன. மேல் மாடியில் ஒரு பால்கனி இருந்தது, ஆனால் இந்த பால்கனி, ஒரு சுவரால் மூடப்பட்டிருந்தது. பால்கனியின் முன் யாராவது சுவர் எழுப்புவார்களா?

அந்த வீட்டில் இணைய இணைப்போ தொலைபேசி இணைப்போ இல்லை. சில நேரங்களில் ஒரு நபர் வீட்டை விட்டு வெளியே சென்று முற்றத்தில் வேகமாக நடப்பதை நாங்கள் கண்டறிந்தோம்.

நாங்கள் அவருக்கு, வேகமாக நடப்பவர் என்று பொருள்படும், ‘த பேஸர்’ என்று பெயரிட்டோம். இந்த வீட்டிலிருந்து குப்பைகளைச் சேகரிக்க பணியாளர்கள் வந்தனர்.

ஆனால் இந்த விட்டில் இருந்தவர்கள், குப்பைகளை வளாகத்துக்குள்ளேயே எரித்து வந்தனர். சி.ஐ.ஏ உளவாளிகள், அந்த பேஸர் தான் ஒஸாமாவாக இருக்கக்கூடும் என்று கருதினர்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வான் தாக்குதல் மூலம் வளாகத்தைத் தாக்கும் திட்டம்

பாகிஸ்தான் அரசாங்கம் அமெரிக்காவுடன் ஒத்துழைத்து ஆப்கானிஸ்தானில் அதன் திட்டத்திற்கு உதவுவதாகக் கூறினாலும், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறையில் சில அமைப்புகள், தாலிபான் மற்றும் அல்-கய்தாவுக்கு ஆதரவளித்ததை யாராலும் மறுக்க முடியாது என்பது ஒபாமாவின் கருத்தாக இருந்தது.

பாகிஸ்தானிய ராணுவ அகாடமி, அபோட்டாபாத் வளாகத்திற்கு மிக அருகில் இருப்பதால், பாகிஸ்தானியர்களிடம் இது குறித்து ஏதேனும் தகவல் பகிரப்பட்டிருந்தால், அந்தத் தகவல் நொடிப் பொழுதில் தாங்கள் இலக்காகக் குறி வைத்திருக்கும் அந்த நபருக்கே கூட போய்ச் சேர்ந்து விடும் என்றும் அவர் நினைத்தார்.

“எங்களுக்கு இரண்டு வழிகள் இருந்தன. முதல் விருப்பம் வான்வழித் தாக்குதல் மூலம் அந்த வளாகத்தையே அழிப்பது. அதன் முதல் நன்மை என்னவென்றால், பாகிஸ்தான் மண்ணில் ஒரு அமெரிக்கர் கொல்லப்படுவதற்கான ஆபத்து எதுவும் இல்லை. பகிரங்கமாக நாங்கள் இந்தத் தாக்குதலில் எங்களுக்குப் பங்கிருப்பதை மறுக்க முடியும்.”

“ஆனால் இதில் ஒரு சிக்கல் இருந்தது. நாங்கள் அந்த இடத்தை வெற்றிகரமாக அழித்து விட்டாலும், அங்கு லேடன் இருப்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது? அல்-கய்தா அதை மறுத்தால், லேடன் கொல்லப்பட்டார் என்பதை நாங்கள் எவ்வாறு நிரூபிப்போம்? இரண்டாவதாக, அந்த வளாகத்தைச் சுற்றியுள்ள வேறு சில மக்களும் கூட கொல்லப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

ஒசாமா அங்கு தான் வசிக்கிறார் என்று நூறு சதவீதம் நிர்ணயிக்கப்படாத நிலையில், அப்பாவி மக்கள் முப்பது நாற்பது பேரைக் கொல்லும் வாய்ப்பு உள்ள இந்தத் திட்டத்துக்கு நான் அனுமதிக்க முடியாது என்று கூட்டுப்படை தலைவர்களின் துணைத் தலைவர் ஹோஸ் கார்ட்ரைட்டிடம் கூறிவிட்டேன்” என்று ஒபாமா எழுதியுள்ளார்.

ஆஃப்கானிஸ்தான் வழியாக பாகிஸ்தானில் நுழையும் திட்டம்

ஒபாமா மேலும், “தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் பாகிஸ்தானுக்குள் நுழைவதற்கும், பாகிஸ்தானிய காவல் துறைக்கோ ராணுவத்துக்கோ எதிர்வினையாற்றக் கூட நேரமில்லாத அளவு விரைவாக அந்த வளாகத்தைத் தாக்குவதற்கும் ஒரு சிறப்புப் படையை அனுமதிக்கும் திட்டமும் இருந்தது. இந்தத் தாக்குதல் குறித்து விளக்க, வைஸ் அட்மிரல் வில்லியம் மெக்ரெவனை அழைத்தேன். ” என்று எழுதுகிறார்.

சிஐஏ, அபோட்டாபாத் வளாகத்தின் முப்பரிமாண மாதிரியை உருவாக்கியது. துணை அட்மிரல் மெக்ரெவன் அதிபர் ஒபாமாவுக்குத் தாக்குதல் குறித்து விளக்கினார்.

சீல்ஸின் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத்தில் இருந்து ஓரிரு ஹெலிகாப்டர்களில் இரவின் இருளில் பாகிஸ்தானில் உள்ள அந்த வளாக இலக்கில் தரையிறங்குவார்கள் என்று முடிவு செய்யப்பட்டது.

மார்ச் 29 அன்று கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில், ஒபாமா பல கேள்விகளை மெக்ரெவனிடம் எழுப்பினார். பாகிஸ்தானின் போர் விமானங்கள் நமது ஹெலிகாப்டர்கள் நுழையும்போதோ அல்லது வெளியேறும்போதோ கண்டறிந்து தடுத்து நிறுத்தினால் நமது நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

பின்லேடன் ஒரு பாதுகாப்பான அறையில் மறைந்திருந்தால், நமது குழு அதைக் கண்டுபிடிக்க, திட்டமிடப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்தால் என்ன செய்வோம்? தாக்குதலின் போது பாகிஸ்தான் படைகள் அந்த இடத்தை சுற்றி வளைத்தால் அதை எவ்வாறு எதிர்கொள்வோம்? ஆகியவை அந்த கேள்விகள்.

இதற்கான விடைகளாக அட்மிரல் மெக்ரெவன் கூறியவற்றையும் ஒபாமா தனது நூலில் விளக்குகிறார்.

“அட்மிரல் மெக்ரெவன் தனது திட்டத்தின் படி பாகிஸ்தானிய படைகளிடம் சிக்கிக் கொள்வது தவிர்க்கப்படும் என்பதையும் பாகிஸ்தானியர்கள் சுற்றி வளைத்தாலும் அந்த வளாகத்தின் பிடியை விட மாட்டோம் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், நமது படையினர், அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற பாகிஸ்தான் அரசாங்கத்துடன் ராஜீய பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்றும் கூறினார்,” என்று ஒபாமா எழுதுகிறார்.

இதற்கிடையில், ஹோஸ் கார்ட்ரைட் மற்றொரு திட்டத்தையும் பரிந்துரைக்கிறார். ‘த பேஸர்’ தினசரி நடைப்பயணத்திற்கு வெளியே வரும்போது 13 பவுண்டுகள் கொண்ட ஏவுகணையை ட்ரோன் மூலம் செலுத்தலாம் என்பது தான் அது. ஒபாமா எந்த ஒரு திட்டத்துக்கும் இறுதி ஒப்புதல் தெரிவிக்கவில்லை. ஆனால் தனது அனுமதி நிச்சயம் உண்டு என்ற அடிப்படையில் திட்டம் தீட்டுமாறு கூறினார்.

ஒபாமாவின் ஆலோசகர்களிடையே கருத்து வேறுபாடு

ஒபாமாவுக்கு நெருக்கமானவர்களில், லியோன் பனெட்டா, ஜான் ப்ரென்னன் மற்றும் மைக் முலென் ஆகியோர் இந்தத் திட்டத்துக்கு ஆதரவளித்தனர்.

இது அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவைக் கெடுத்துவிடும் என்று ஹிலாரி கிளின்டன் கவலை தெரிவித்தார். அமெரிக்கக் கடற்படையான சீல்ஸ், பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்கொள்ள நேர்ந்துவிடக்கூடாது என்றும் அவர் அஞ்சினார்.

பாதுகாப்பு அமைச்சர், ராபர்ட் கேட்ஸ் இத்திட்டத்தை எதிர்த்தார். ஏப்ரல் 1980 இல், இரானில் 53 அமெரிக்க பணயக்கைதிகளை இதேபோன்ற முறையில் விடுவிக்கும் முயற்சி தோல்வியடைந்தது, மேலும் அமெரிக்கா அதிக பாதிப்புகளையும் சந்திக்க நேர்ந்தது என்பது அவரது வாதம்.

அந்த திட்டத்தில், ஒரு அமெரிக்க ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 8 வீரர்களும் கொல்லப்பட்டனர். ஒருவேளை இதன் காரணமாகவே ஜிம்மி கார்ட்டர் அதிபர் தேர்தலில் தோல்வியும் அடைந்தார்.

இந்தத் தாக்குதலுக்குத் துணை அதிபர் ஜோ பைடனும் எதிர்ப்பு தெரிவித்தார். அதன் தோல்வியின் விளைவுகள் மிகவும் ஆபத்தானவை என்று அவர் வாதிட்டார். ஒசாமா பின்லேடன் தங்கியிருப்பது குறித்து உளவுத்துறை வட்டாரங்கள் முழுமையாக உறுதி செய்யும் வரை இந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

தாக்குதலுக்கு உத்தரவிட்ட ஒபாமா

ஏப்ரல் 28 அன்று இரவு உணவு மேஜையில், ஒபாமாவின் மனைவி மிஷல் மற்றும் மகள்கள் அவர் வீட்டில் அணியும் பழைய செருப்புகளைப் பற்றி கிண்டல் செய்தனர். பராக் இனிப்பை விரும்புவதில்லை என்றும் அவர்கள் கேலி செய்தார்கள்.

தனது மகள்களைத் தூங்க வைத்த பிறகு, பராக் ஒபாமா ட்ரீட்டி ரூம் எனப்படும் படிக்கும் அறையில் ஓய்வெடுக்கச் சென்று தொலைக்காட்சியில் ஒரு கூடைப்பந்து போட்டியைப் பார்த்தார்.

மறுநாள் ஒபாமா அலபாமாவுக்குச் சென்று துசாலூசாவில் ஏற்பட்ட புயலால் ஏற்பட்ட பேரழிவைப் பார்வையிட்டு, அன்று மாலை மியாமியில் உரை நிகழ்த்தவிருந்தார். இடையில், அவர் விண்வெளி விண்கலம் ‘எண்டெவர்’ ஏவப்படுவதைக் காட்ட மிஷல் மற்றும் மகள்களை அழைத்துச் செல்லவிருந்தார்.

புறப்படுவதற்கு முன் டாம் டோனிலன், டென்னிஸ் மெக்டொனோ, பில் டேலி மற்றும் ஜான் ப்ரென்னன் ஆகியோருக்கு ஒபாமா அனுப்பிய மின்னஞ்சலில் ராஜீய வரவேற்பறையில் தன்னைச் சந்திக்குமாறு குறிப்பிட்டார்.

“குடும்பத்தினருடன் செளத் லானை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். அங்கு ‘மரைன் ஒன்’ ஹெலிகாப்டர் புறப்பட தயாராகியிருந்தது. ஹெலிகாப்டர் என்ஜின்களின் சத்தத்துக்கிடையில், நான் அபோட்டாபாத் தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்தேன்.

இந்தத் திட்டத்தின் மொத்த கட்டுப்பாடும், அட்மிரல் மெக்ரெவன் கையில் இருக்கும் என்றும் தாக்குதல் எப்போது தொடங்கப்படும் என்பதை அவரே தீர்மானிப்பார் என்றும் நான் தெளிவுபடுத்தினேன்.” என்று ஒபாமா எழுதியுள்ளார்.

செயற்கைக்கோள் மூலம் தாக்குதலின் மேற்பார்வை

மே 2, 2011 அன்று, ஒபாமா வெள்ளை மாளிகை ஆபரேட்டர் எழுந்திருக்கும் முன்பே கண் விழித்தார். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் விளையாடுவதைப் போல, மார்வின் நிக்கல்சனுடன் சிறிது நேரம் கோல்ஃப் விளையாட முடிவு செய்தார்.

“வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய பிறகு, ஓவல் அலுவலகத்தில் சில கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன், ஆனால் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு என் சகாக்களான ரெஜி லவ், மார்வின் நிக்கல்சன் மற்றும் பீட் ரூஸ் ஆகியோரை ஓவலின் சாப்பாட்டு அறையில் அழைத்தேன்.

நாங்கள் ‘ஸ்பேட்ஸ்’ விளையாட ஆரம்பித்தோம். ஈஸ்டர்ன் ஸ்டாண்டர்ட் நேரத்தின்படி, சரியாக 2 மணியளவில், இரண்டு பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் ஜலாலாபாத் விமான தளத்திலிருந்து அபோட்டாபாத் வளாகத்திற்குப் பறந்தன. சீல் குழுவில் 23 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களுடன் ஒரு பாகிஸ்தான் மொழிபெயர்ப்பாளர் மற்றும் ராணுவ நாய் கெய்ரோவும் இருந்தது. ” என்று ஒபாமா எழுதியுள்ளார்.

ஒபாமா ஓவல் அலுவலகத்திலிருந்து சிச்சுவேஷன் ரூம் சென்றார். அங்கு லியோன் பனெட்டா, சிஐஏ தலைமையகமான லாங்லியிலிருந்து வீடியோ கான்ஃபெரன்ஸ் லைன் வழியாக இணைக்கப்பட்டார்.

அட்மிரல் மெக்ரெவன் ஜலாலாபாத்தில் இருந்தார், சீல்ஸுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தார். டாம், ஹிலாரி, ஜோ பைடன், டென்னிஸ் மெக்டானோ, கேட்ஸ், முலென் மற்றும் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் மாநாட்டு மேசையில் அமர்ந்திருந்தனர்.

தாக்குதல் திட்டத்தின் வெற்றி அல்லது தோல்விக்குப் பின்னர் பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளுக்கு எவ்வாறு தகவல் தெரிவிக்கப்படும் என்பது குறித்து ஒபாமாவுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

ஒபாமா சிறிது நேரம் மாடிக்குச் சென்றார், ஆனால் அப்போது, பனெட்டா, பிளாக் ஹாக்ஸ் அபோட்டாபாத்தின் வளாகத்தில் இறங்கப்போவதாக அறிவித்தார்.

நேரலையில் கவனம் செலுத்திய ஒபாமா

ஒபாமா எழுதுகிறார், “இலக்கை நோக்கி ஹெலிகாப்டர் தரையிறங்கியவுடன் நான் என் நாற்காலியில் இருந்து எழுந்து நின்றேன். நான் அதைப் பார்க்க விரும்புகிறேன் என்று சொன்னேன். இந்தப் பயணத்தின் நேரலை வரும் அடுத்த அறைக்குச் சென்றேன்.

அங்கு நீல நிற சீருடையில் விமானப்படை படைப்பிரிவு ஜெனரல் பிராட் வெப் ஒரு மேஜையில் கணினிக்கு முன்னால் அமர்ந்திருந்தார், அவர் எனக்கு நாற்காலியைக் கொடுக்க முன்வந்தார்.

ஆனால் நான் அவரது தோள்பட்டையை அழுத்தி உட்காரச் சொன்னேன். நான் கான்ஃப்ரன்ஸ் அறையிலிருந்து வந்து தனது அறைக்குள் நுழைந்து நேரலையைப் பார்த்துக் கொண்டிருப்பதாக வெப் உடனடியாக மெக்ரெவனுக்குத் தெரிவித்தார். சிறிது நேரத்தில் எனது சகாக்களும் அந்த சிறிய அறையில் கூடினர்.”

ஜெரோனிமோ – எனிமி கில்ட் இன் ஆக்ஷன்’

ஒபாமா அங்கே உட்கார்ந்த அடுத்த நிமிடம், ஒரு ப்ளாக் ஹாக் ஹெலிகாப்டர், கீழே இறங்கியபடியே தள்ளாடியதைக் கண்டார். என்ன நடக்கிறது என்று அவர் புரிந்து கொள்ளுமுன், மெக்ரெவன், ஹெலிகாப்டரின் ஒரு இறக்கை வளாகத்தின் சுவரில் மோதியது என்று தெரிவித்தார்.

“ஒரு கணம், நான் மிகவும் பயந்தேன், ஏதோ கெடுதல் நடக்கப்போகிறது என்று தோன்ற ஆரம்பித்தது. உடனே, ‘எல்லாம் சரியாகிவிடும்.’ என்ற மெக்ரெவனின் குரல் என் காதுகளில் எதிரொலித்தது.

அவரின் குரலில் இருந்த தொனி, ஏதோ ஒரு ஷாப்பிங் மாலில் ஒரு கார், ஷாப்பிங் டிராலியுடன் மோதியது போல இருந்தது. அவர் நமது சிறந்த விமானி என்றும் அவர் ஹெலிகாப்டரை பாதுகாப்பாகத் தரையிறக்குவார் என்றும் மெக்ரெவன் தெரிவித்தார். அப்படியே தான் நடந்தது”

“இருபது நிமிடங்களுக்கு, அங்கு என்ன நடக்கிறது என்பதை மெக்ரெவனால் கூட முழுமையாகக் காணமுடியவில்லை. திடீரென்று, மெக்ராவன் மற்றும் பனெட்டா இருவரும் நாங்கள் ஆவலுடன் காத்திருந்த வார்த்தைகளைச் சொன்னார்கள் – “ஜெரோனிமோ ஈ.கே.இ.ஏ (எனிமி கில்ட் இன் ஆக்ஷன் ) ‘. அறையில் இருந்த அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். வீடியோ காட்சி மீதே என் கண்கள் இருந்தன. நான் மெல்லிய குரலில் ” வீ காட் ஹிம்(we got him)” என்று கூறினேன். ” என்று ஒபாமா எழுதுகிறார்.

ராணுவ வீரரைப் படுக்க வைத்து அளக்கப்பட்ட லேடனின் உயரம்

அடுத்த 20 நிமிடங்களுக்கு யாரும் இடத்தை விட்டு அசையவில்லை

ஹெலிகாப்டர்கள் திரும்பத் தயாரான போது, ஜோ பைடன், ஒபாமாவின் தோள்களைப் பிடித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஒபாமா எழுந்து, அங்கிருந்த அனைவருக்கும் கை கொடுத்தார். ஆனால், பாகிஸ்தான் எல்லையை விட்டு ஹெலிகாப்டர் வெளிவரும் வரை அனைவரும் மௌனமாகக் காத்திருந்தனர். ஆறு மணிக்கு ஹெலிகாப்டர்கள் ஜலாலாபாத்தில் தரையிறங்கிய பிறகு தான் ஒபாமாவுக்கு உயிரே வந்தது போலிருந்தது.

வீடியோ கான்ஃப்ரன்ஸில் மெக்ரெவன் அவரிடம், “நான் உங்களுடன் பேசும்போது, லேடனின் உடல் எனக்கு முன்னால் கிடந்தது. எனது அணியின், ஆறு அடி இரண்டு அங்குல உயரமுள்ள ஒரு வீரரை லேடனின் உடலுக்கு அருகில் கிடத்தி, இறந்த மனிதனின் உயரம் ஆறு அடி நான்கு அங்குலம் என்று கணக்கெடுத்தேன்” என்றார்.

ஒபாமா பில் மெக்ரெவனிடம் கேலியாக, “பில், இவ்வளவு பெரிய தாக்குதலுக்குச் சென்றீர்கள், அளவெடுக்க ஒரு டேப்பைக் கொண்டு செல்ல மறந்துவிட்டீர்கள்!” என்று கூறினார்.

கடலில் அடக்கம் செய்யப்பட்ட லேடனின் உடல்

முன்னரே முடிவு செய்யப்பட்டபடி, ஒசாமா பின்லேடனின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டது. முதலில் உடல் அமெரிக்க போர் கப்பலான கார்ல் வின்சனில் கொண்டு செல்லப்பட்டது. அந்த உடல் ஒரு வெள்ளை துணியில் சுற்றப்பட்டுப் பின்னர் ஒரு கனமான கருப்புப் பையில் போடப்பட்டது.

இதை விவரிக்கும் முன்னாள் சிஐஏ இயக்குநர் லியோன் பனெட்டா தனது சுயசரிதை ‘வர்தி ஃபைட்ஸ்’ இல், “உடல் கடலில் மூழ்கி இருப்பதை உறுதி செய்வதற்காக 150 கிலோ இரும்புச் சங்கிலிகள் லேடனின் உடல் பையில் வைக்கப்பட்டன.” போர்க்கப்பலின் சுவரை ஒட்டிய ஒரு வெள்ளை மேசையில் அந்தப் பை வைக்கப்பட்டது. ”

“லேடனின் உடல் வைக்கப்பட்ட பை மிகவும் கனமாக இருந்தது, அது கடலில் விடப்பட்டபோது, தன்னுடன் அந்த மேசையையும் சேர்த்து இழுத்துச் சென்றது. சிறிது நேரத்தில் லேடனின் உடல் கடலின் ஆழத்தில் மூழ்கியது. ஆனால் அந்த வெள்ளை மேசை மூழ்கவில்லை. அது கடலில் மிதந்து கொண்டிருந்தது. ” என்று எழுதியுள்ளார்.

ஒபாமாவுக்கு ராணுவ வீரர்களின் பரிசு

அடுத்த நாள் ஒபாமா கென்டக்கியில் உள்ள ஃபோர்ட் காம்ப்பெல் சென்றார், அங்கு மெக்ரெவன், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட சீல் குழுவினரை ஒபாமாவுக்கும் பைடனுக்கும் அறிமுகப்படுத்தினார்.

ஒபாமா, அவர்கள் அனைவருடனும் கைகுலுக்கினார். அவர்கள், ஒபாமாவிற்கு ஒரு பரிசை வழங்கினர். அவர்கள் அபோட்டாபாத்துக்குத் தங்களுடன் எடுத்துச் சென்ற அமெரிக்க கொடியில் கையெழுத்திட்டு அதை ஃப்ரேம் செய்து, அதிபர் ஒபாமாவிடம் வழங்கினார்கள்.

இந்தச் சந்திப்பின் போது லேடன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார் என்று அவர்களும் கூறவில்லை. ஒபாமாவும் அதைக் கேட்கவில்லை.