முன்னணிக்கு உள்ள கொள்கை ஏனைய தமிழ் கட்சிகளுக்கு ஏன் இல்லை?

கோட்டாபய அரசின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மிக மோசமானது என்பதை அது சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அன்றே நாம் ஊடகங்களுக்குத் தெரிவித்து விட்டோம்.

அதன்பின்னர், சபையில் நடைபெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின்போதும், அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தின்போதும் அதை எதிர்த்து நாம் உரையாற்றினோம்.

கோட்டாபய அரசின் மிக மோசமான வரவு செலவுத் திட்டத்தால் எந்தப் பயனும் தமிழருக்கு இல்லை. அதேவேளை, அது சபையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியே தீரும் என்பதும் எங்களுக்கு ஏற்கனவே தெரியும்.

இந்நிலையில், வாக்கெடுப்பில் நாம் பங்கேற்று அதை எதிர்ப்பதால் எதுவும் நடக்கபோவதும் இல்லை. அதனால்தான் வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின்போதும் நாம் பங்கேற்கவில்லை” இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தகும்.

இலங்கை அரசாங்கத்தின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பின்போது கூட்டமைப்பு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை, விக்னேஸ்வரனும் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில், வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்றால் அதன் அர்த்தம் அதை எதிர்க்கவும் விரும்பவில்லை ஆதரிக்கவும் விரும்பவில்லை என்பதே. அதாவது, இரண்டுங்கெட்டான் நிலை.

மேலும், வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப் பட்டபின்னர் நடந்த உத்தியோகபூர்வ விருந்துபசாரத்தில் சம்பந்தர் மட்டும் கலந்து கொண்டிருக்கிறார். இதன்மூலம், கூட்டமைப்பு தனது வாக்காளர்களுக்கு வெளிப்படுத்தும் செய்தி என்ன?

பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டின் மீதான நாடாளுமன்ற விவாதத்தின்போது கஜேந்திரகுமார் கவனிப்புகுரிய ஒரு உரையை ஆற்றினார். இதன்போது, கூட்டமைப்பு தனது ஐந்து நிமிடங்களை அவருக்கு வழங்கி அவர் தொடர்ந்து உரையாற்ற உதவி புரிந்தது. எனினும், அதன்பின்னர் நடந்த வாக்கெடுப்பில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், டெலோ இயக்கம் வாக்கெடுப்பை எதிர்த்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் எதிர்த்தது.

அரசாங்கத்தை எதிர்ப்பதால் ஒரு பயனும் இல்லை, அவர்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மையால் வரவுசெலவுத் திட்டத்தை எப்படியும் நிறைவேற்றியே தீருவார்கள் என்று கூட்டமைப்பு கூறுகின்றது. விக்னேஸ்வரனின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு இக்கட்டுரை எழுதப்படுகையில் தெரிய வந்திருக்கவில்லை. எதிர்ப்பதால் பலனில்லை என்றால் எதிர்த்துப் பேசி மட்டும் என்ன பலன்? நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஆற்றிய அட்டகாசமான உரைகளுக்கு என்ன பொருள்?

இக்கேள்வியை விக்னேஸ்வரனிடமும் கேட்கலாம். ஆயின், அவர்கள் அந்த உரைகளின்மூலம் எதைச் சாதிக்கலாம் என்று நம்புகிறார்கள்? அவர்கள் கூறும் காரணம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால், ஆவேசமாக எதிர்த்து உரை நிகழ்த்தியபின்னர் வாக்கெடுப்பில் எதிர்க்கவில்லை என்பது இரட்டை நிலைப்பாடே. அதன்மூலம் அவர்களே அவர்களுடைய உரைகளைத் தோற்கடித்து விட்டார்கள். அவர்களே அவர்களுடைய உரைகளைப் புனிதமிழக்கச் செய்துவிட்டார்கள்.

மிதவாத அரசியலில் எதிர்த் தரப்புடன் ஒன்றாக உட்கார்ந்து விருந்துண்ணும் ஒரு சபை நாகரிகம் உண்டு. இக்கட்டுரை அச்சபை நாகரீகத்தைக் கேள்வி எழுப்பவில்லை. ஆனால், இங்கே கேள்வி என்னவென்றால் வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதங்களில் காரசாரமாக கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்பொழுது என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதுதான்.

குறிப்பாக சாணக்கியனின் உரை பல்லாயிரக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. பாராட்டப்பட்டிருக்கிறது. ஆனால், இப்பொழுது அந்த உரை விசுவாசமானதா என்ற கேள்வி எழுகிறது. அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சிக்கும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எந்த அடிப்படையில் வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்காமல் விட்டார்கள் என்பதைத் தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அப்படித்தான் விக்னேஸ்வரனும் அதற்குரிய சரியான விளக்கத்தை தமிழ் மக்களுக்குத வழங்க வேண்டும்.

இந்தவிடயத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒன்றுதான் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே வேறுபாடு இல்லாத ஒரு முடிவை எடுத்து எதிர்த்து வாக்களித்தது. எனவே, அது பேசிய பேச்சுக்கள் இப்பொழுதும் அவற்றின் புனிதத்தை இழக்கச் செய்யவில்லை. அதேசமயம் கூட்டமைப்பு மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரின் பேச்சுக்கும் செயலுக்கும் இடையில் இருக்கும் முரண்பாடு பின்வரும் கேள்விகளை எழுப்புகின்றது.

கேள்வி ஒன்று – கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசும் வீராவேசமான பேச்சுக்கள் இதயத்திலிருந்து வரவில்லையா? அடுத்தநாள் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வர வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பேசப்படுகின்றனவா?

கேள்வி இரண்டு – கஜேந்திரகுமார் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் பேசும் பேச்சுக்களைப் போல தாங்களும் பேசினால்தான் தமது வாக்காளர் தொகுதியை பாதுகாக்கலாம் என்பதனால் கூட்டமைப்பினரும் இப்போது அவ்வாறு பேசுகிறார்களா?

கேள்வி மூன்று – கூட்டமைப்பு அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தின்படி நடந்து கொள்ளவில்லை. அது தன் வாக்காளர்களை ஏமாற்றி விட்டது என்று கூறி கட்சியிலிருந்து விலகிய விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் பாணியிலேயே ஏன் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை? அவரும் அக்கட்சியின் அதே மிதவாதத் தந்திரத்தைப் பின்பற்றப் போகிறாரா?

கேள்வி நான்கு – இவ்வாறு சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் வேறுபாடு உள்ள ஓர் அரசியற் சூழ்நிலையில் கொள்கை அடிப்படையிலான கூட்டுக்களை கற்பனை செய்ய முடியுமா?

கேள்வி ஐந்து – கொள்கை அடிப்படையில் ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப முடியாது என்பது கடந்த பத்தாண்டுகளில் நிரூபிக்கப்பட்ட ஒன்று. எனவே, குறைந்தபட்சம் விவகார மையக் கூட்டுக்களையாவது உருவாக்கலாம் என்று சிந்திக்கும் ஒரு பின்னணியில் அதற்குரிய வாய்ப்புகளும் குறைவா?

ஆம். விவகாரமாக கூட்டுக்களை உருவாக்குவது என்றால் ஒரு விவகாரத்தில் பொது நிலைப்பாட்டை எடுக்கும் விதத்தில் கட்சிகள் இணைந்து தங்களுக்கிடையே பேச வேண்டும். அதற்குரிய ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும். அதன்படி தமிழ் மக்களின் இதயமான பிரச்சினைகள் என்று கருதத்தக்க விடயப்பரப்புகளில் குறைந்தபட்ச ஐக்கியத்தையாவது கட்டியெழுப்ப வேண்டும்.

ஆனால், அப்படிப்பட்ட குறைந்தபட்ச ஐக்கியத்தைக்கூட மேற்படி கட்சிகளுக்கிடையே கட்டியெழுப்ப முடியாது என்பதைத்தான் நடந்து முடிந்த வாக்கெடுப்பு நிரூபித்திருக்கிறது. எதிர்த்தாலும் எதிர்க்காவிட்டாலும் அவர்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இருப்பதனால் அவர்கள் அந்த வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்றுவார்கள் என்று கூறப்படும் சமாதானம் ஏற்புடையதல்ல.

இந்த நாடாளுமன்றம் உருவாக்கப்பட்ட பின்னர் மனோ கணேசனை ஒரு ஊடகவியலாளர் பேட்டி கண்டார், அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைச் சுட்டிக்காட்டி அவர் கேள்வி கேட்டார்.

அப்போது மனோ கணேசன் கூறினார், அவர்களிடம் 150 ஆசனங்கள் உண்டு என்பதற்காக மிகுதி 75 பேரும் வீட்டுக்கா போவது? இல்லை நாங்கள் மக்கள் பிரதிநிதிகள், எனவே எதிர்ப்போம். சும்மா இருக்க மாட்டோம். இந்தியாவிடம் போவோம், அமெரிக்காவிடம் போவோம், ஐ.நா.விடம் போவோம் என்ற தொனிப்பட அவர் பதில் கூறினார்.

இது கூட்டமைப்புக்கும் பொருந்தும், விக்னேஸ்வரனுக்கும் பொருந்தும். வெல்ல முடியாது என்பதற்காக நீதியின் பக்கம் நின்று தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது. நாடாளுமன்றத்தில் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான வழி வாக்கெடுப்பு. அதில் கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும் தமது நிலைப்பாட்டைத் துலக்கமாக வெளிக்காட்டியிருக்க வேண்டும். நழுவியிருக்கக்கூடாது.

இதுவிடயத்தில், கூட்டமைப்பை விடவும் விக்னேஸ்வரனுக்கு பொறுப்பு அதிகம். அவர் தன்னை ஒரு நேர்மையான முன்னாள் நீதியரசராகவே எப்பொழுதும் காட்டிக் கொண்டார். எனவே, இந்த விடயத்தில் அவர் தன்னுடைய நிலைப்பாட்டை தன்னுடைய பேச்சுக்கு முரண்பாடு இல்லாத விதத்தில் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. அத்துடன், இது கஜேந்திரகுமார் அவரோடு சேர மறுத்தமைக்குக் கூறிய காரணங்களை நிரூபிப்பதாக அமைந்து விடுமா?

எனவே, வரவுசெலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் தமிழ் கட்சிகள் நடந்துகொண்ட விதம் கொள்கை ரீதியாகத் தமிழ் ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதில் இருக்கக்கூடிய சவால்களின் பருமனைக் காட்டுகிறது. மட்டுமல்லாது, விவகாரங்களை மையப்படுத்தி தந்திரோபாயக் கூட்டுக்களை அல்லது சமயோசிதக் கூட்டுக்களை உருவாக்குவதில் இருக்கக்கூடிய வரையறைகளையும் அது உணர்த்துகிறது.

எனினும், இதுவிடயத்தில் அது ஒரு தமிழ் பரவணி வியாதி என்று கூறி விலகி நிற்க முடியாது. ஏனெனில், தமிழ் ஐக்கியத்தை ஏதோ ஒரு அடிப்படையில் கட்டியெழுப்ப வேண்டிய தேவை முன்னரை விட அதிகமாக உள்ளது.

அரசாங்கம் ஒரு புதிய யாப்பைக் கொண்டு வரப்போவதாக ஒரு தோற்றத்தைக் காட்டுகிறது. இந்த யாப்பில் இனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளடக்கப்பட வேண்டும். ஆனால், அதுவிடயத்தில் தமிழ் தரப்பு ஒருமித்த நிலைப்பாட்டோடு இல்லை. எனவே, தீர்வு விடயத்திலும் வெளியுறவுக் கொள்கை சார்ந்த முக்கிய விவகாரங்கள் பொறுத்தும் விவகார மையக் கூட்டுக்களை உருவாக்க வேண்டும். அதன்மூலம் தனியோட்டம் ஓடக்கூடிய கட்சிகளை பொறுப்புக்கூற வைக்க வேண்டும்.

இல்லையென்றால், ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு தீர்வை முன்வைக்கும். ஒவ்வொரு கட்சியும் வருகிற வெளிநாட்டு தூதுவரோடு ஒவ்வொரு விதமாகக் கதைக்கும். இது தமிழ் மக்கள் ஒரு தேசமாக இல்லை என்ற செய்தியை வெளித் தரப்புக்குக் கொடுக்கும். அதுமட்டுமல்லாது அதிக தொகை பிரதிநிதிகளைக் கொண்ட கூட்டமைப்பு தனியோட்டம் ஓடித் தமிழ் மக்களையும் தோற்கடித்து தன்னையும் தோற்கடித்து விடும்.

எனவே, வரவுசெலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு என்பது ஒருபுறம் தமிழ் ஐக்கியம் குறித்த சந்தேகங்களை, அவநம்பிக்கைகளை அதிகப்படுத்தி இருந்தாலும்கூட இன்னொரு புறம் குறைந்தபட்சம் விவகார மையக் கூட்டுக்களையாவது உருவாக்க வேண்டிய கட்டாயத்தை நமக்கு உணர்த்தியிருக்கிறது என்பதே சரியானதாகும்.