இலங்கையில் முதலாவது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தேவராசாவின் 35 வது ஆண்டு நினைவு தினம்

இலங்கையில் முதலாவது படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் அமரர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் 35வது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் காரியாலயத்தில் இன்று (25.12.2020) இடம்பெற்றது.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவ அதிரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியராளரின் சகோதரரான கவிஞர் ஓய்பெற்ற அதிபர் அக்கரைப் பாக்கியன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை பாக்கியராசா, மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நினைவுரைகளும் இடம்பெற்றன.

இதன்போது கருத்துத் தெரிவித்த படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராஜனின் சகோதரர் ஓய்வுபெற்ற அதிபர் கணபதிப்பிள்ளை பாக்கியராசா கருத்துத் தெரிவிக்கையில்,

என்னைப் பெறுத்தவரையில் சில ஊடகங்கள் உண்மையை மறைப்பது மிகவும் மனவேதனையாகவுள்ளது. இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் வரிசையில் அமரர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் பெயர் இடம்பெறவில்லை. மாறாக இலங்கையில் முதன்முதலில் படுகொலை செய்யப்பட்டவர்தான் எனது சகோதரர் கணபதிப்பிள்ளை தேவராசா ஆவார். இதனை நினைத்து வேதனையாகவுள்ளது. ஊடகவியலாளர் என்ற காரணத்தினால்தான் எனது சககோதரன் கடந்த 1985.12.25 அன்று அம்பாறை கொண்டவட்டுவானில் வைத்து இராணுவத்தினாரால் படுகொலை செய்யப்பட்டார். “குட்டியாடு தப்பிச் சென்றால் அது குள்ளநரிக்குச் சொந்தம்” அதுபோன்றுதான் ஊடகவியலாளர்களும் மாட்டிக்கிட்டால் அராஜகம் புரிபவர்கள், அட்டூளியக்காரர்களுக்குச் சொந்தம். 1985 ஆம் ஆண்டும் இதுதான் நடைபெற்றதும் இதுதான்.

1985.12.23 அன்று அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு உள்ளிட்ட பல பகுதிகளும், இராணுவதிரால் சுற்றிவழைக்கப்பட்டன. அதிலேதான் எனது சகோதரன் தேவராஜாவும் அகப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டு கொண்டவட்டுவான் முகாமிற்குச் கொண்டு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்தார். அப்போதிருந்த மாவட்ட அமைச்சரும் பொத்துவில் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரங்கநாயகி பத்மநாதனுடனும் தொடர்பு கொண்டு பல பிரயத்தனங்களைச் செய்தும் எமது சகோதரனை மீட்க முடியாமல் போய்விட்டது. பின்னர் 1685.12.25 ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலியின் 6 மணி செய்தியில் சொல்லப்படுகின்றது கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் தேவராசா படுகொலை செய்யப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதான் உண்மை.

இந்த உண்மை வெளிக்கொணரப்படவில்லை. ஊடகங்கள்தான் உண்மையை வெளிக்கொணர வேண்டும். ஆனால் ஊடகங்கள் இந்த உண்மையை இதுவரையில் வெளிக்கொண்டுவராமையே மிகவும் வேதனையாகவுள்ளது. இன்றிலிருந்தாவது இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் அமரர் கணபதிப்பிளன்ளை தேவராசா என்பது பதிவு செய்யப்படல் வேண்டும். இதனை விடுத்து வேறு விடயங்கள் வெளிவருமானால் அதனை மறுத்து வாதாடுவதற்கு எமக்கு உரிமையுண்டு.

1981 ஆம் ஆண்டிலிருந்து 1985 ஆம் ஆண்டுவரை ஊடகத்துறையில் மிகவும் சிறப்புறச் செயற்பட்டவர். பல கட்டுரைகளை வெளிக்கொணர்ந்தவர். அவர் அப்போது படுகொலை செய்யப்படாமலிருந்திருந்தால் இன்னும் பல விடையங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிக் கொணந்திருப்பார். எனவே இலங்கைளில் முதன்முதலில் படுகொலை செய்யப்பட்டவர் கணபதிப்பிள்ளை தேவராசா என்பதை தற்போதைய ஊடகவியலாளர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லவேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.