200 வருட பழமையான மிஷனரிமாரால் நாட்டப்பட்ட மரங்கள் பேராயரால் வெட்டப்பட்டதா?

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியின் வரலாற்று பெருமை மிக்க அரிய மரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக 5 மரங்கள் தறிக்கப்பட்ட விடயத்தை பத்திரிகை வாயிலாக அறிநது அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இதனை எழுதுகின்றேன்.

யாழ்ப்பாணக் கல்லூரி எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு 200 ஆவது வருடத்தைப் பூர்த்தி செய்யவுள்ளது. யாழ்ப்பாணத்தின் கல்விப் பாரம்பரியத்தின் ஒரு மைல்கல்லாக விளங்கும்’ பாடசாலைகள் சிலவற்றில் இதுவும் ஒன்று.

இக்கல்லூரியின் 200 வருட பழமையை ஒத்த வரலாற்றைக் கொண்டவையே இங்கு பரந்து ஓங்கி வளர்ந்து நிற்கும் மரங்கள். அம்மரங்கள் தற்போது கல்லூரியின் நிர்வாகத்தினாலும், கல்லூரியின் ஆளுநர்சபையினராலும், பேராயராலும், இராணுவத்தினரின் துணையுடன் முன் அனுமதியின்றி சட்டவிரோதமாகத் தறிக்கப்பட்டுள்ளன. இது ஒரு சட்டவிரோத செயல் மாத்திரமல்ல, சமூகவிரோதச் செயலுமாகும். இவர்களால் மேற்கொள்ளப்படும் கூட்டுக்களவாணியாகவே இது பார்க்கப்படுகின்றது. பல மரங்கள் இரவோடு இரவாக தறிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இம்மரங்களில் அதிகமானவை 150 வருடத்துக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டவையாகும். அவ்வாறான மரங்களை தறிப்பதற்கு எப்படியான மனநிலை வந்ததோ தெரியவில்லை. கல்லூரியின் நிர்வாகத்திலும் சரி ஆளுநர் சபையிலும் சரி இருக்கின்ற சிலர் வெள்ளையாடை தரித்தவர்கள். தங்களை பரிசுத்தவான்களாகவும் ஏனையவர்களை பாவிகளாவும் பார்க்கும் பக்குவம் கொண்டவர்கள். இதில் சிலருக்கு முறைசார் கல்வியறிவு இல்லை என்பது இத்தகைய கொடூரச் செயல் மூலம் நன்கு விளங்கியுள்ளது. கல்லூரியிலும் சரி அது சார்ந்துள்ள திருச்சபையிலும் சரி பல தில்லுமுல்லுகளை செய்து பதவிக்கு வந்த பலராலே இத்தகைய சமூகவிரோதச் செயல்களை தொடர்ந்து செய்ய முடிகின்றது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்துக் கொண்டு இருந்த சிலரால் இவர்கள் காப்பாற்றப்பட்டு வந்தார்கள். எனினும் எதிர்காலத்தில் இத்தகைய குருட்டுத்தனமான செயற்பாடுகளுக்கு நாம் தொடர்ந்தும் பாராமுகமாக இருப்போமாக இருந்தால் கல்லூரி மட்டுமல்ல எமது எதிர்கால சமூகமும் நாசமாகிப்போவதற்கான வரலாற்றுத் தவறினை விடுப்பவர்களாக வரலாற்றால் மன்னிக்கப்படாதவர்களாக மாறிவிடுவோம். எனவே கல்லூரியின் அன்பார்ந்த பழைய மாணவர்களே! ஆசிரியர்களே , சமூக நலன்விரும்பிகளே, சூழலியிலாளர்களே விழித்தெழுங்கள். …….. இங்கு தறிக்கப்பட்ட இடம் முக்கியமல்ல, தறிக்கப்பட்ட மரங்களின் முக்கியத்துவமும் அதன் சட்டவிரோதச் செயலுமே முக்கியத்துவமானது. இது தொடர்பாக பிரதேச செயலகம் மாவட்ட செயலகம், சுற்றாடல் அதிகார சபை மற்றும் ஜனாதிபதி( நேரடியாக) வரை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது. இது ஒரு ஆறுதல் தரும் செயதியாக உள்ளபோதும் மற்றைய மரங்களையும் பாதுகாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பும் எமக்குள்ளது என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும்