தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி இன்று மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார வழிமுறையினை பின்பற்றியவாறு இந்த போராட்டம் இன்று காலை காந்தி பூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாண பொது மக்கள், சிவில் அமைப்புகள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள் என்பன இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை அரசே அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்க என்னும் தொனிப்பொருளில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலங்கை அரசே தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து நல்லிணக்கத்தினை உறுதிப்படுத்து, தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குங்கள் போன்று சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தினையும் நீக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் தமிழருக்கு ஒரு சட்டம் சிங்கள மக்களுக்கு ஒரு சட்டமா, இந்த நாட்டின் சட்டங்கள் ஒரு இனத்திற்கு மட்டுமா, அரசியல் கைதிகளின் விடுதலையில் பாரபட்சம் காட்டுவது ஏன் என்ற பல்வேறு கேள்விகள் அரசாங்கத்திடம் எழுப்பப்பட்டுள்ளன.
இந்த போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.