முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமை தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கும், இராணுவத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நினைவுத் தூபி இடிக்கப்பட்டமையானது, பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்மானம். இந்த விடயத்திற்கும் இராணுவத்திற்கும் தொடர்பு கிடையாது, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் இவ்விடயத்தில் தலையிட போவதில்லை எனவும் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்திற்குள் அமைதியின்மை ஏற்பட்டு, அதனை பொலிஸாரினால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாத பட்சத்தில் மாத்திரமே, தம்மால் அந்த விவகாரத்தில் தலையிட முடியும் என்றும் குறிப்பிட்டார்.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பொது மக்களை நினைவு கூரும் வகையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக யாழ். பல்கலைக்கழத்தில் தற்போதும் பரபரபான சூழ்நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.