நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழியச் சிறைத்தண்டனை

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயர்நீதிமன்றம் 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காகவே இந்த தண்டனை இன்று வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மல்கொட, பீ.பத்மன் சூரசேன மற்றும் சிசிர டீ ஆப்றூ ஆகியோர் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் திகதியன்று அலரி மாளிகைக்கு வெளியே இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ரஞ்சன் ராமநாயக்க நீதிபதிகள் தொடர்பாக வெளியிட்ட கருத்தே நீதிமன்ற அவமதிப்பதாக கருதப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியதால், நீதியரசர்கள் குழாமின் தலைவரான சிசிர டி ஆப்றூ, குற்றவாளியான நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு கடூழிய சிறைத்தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கை இளைப்பாறிய வான்படை அதிகாரி சுனில் பெரேரா மற்றும் மாகல்கந்தேசுதத்த தேரர் ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.