மாங்குளம் பிரதான வீதியில் தமிழ் இளைஞனுக்கு பொலிஸாரால் நேர்ந்த கதி! தமிழர் பகுதியில் நடப்பது என்ன?

போக்குவரத்து பொலிஸாரிடம் தமிழில் தண்டப்பத்திரத்தை எழுதித்தரும்படி கோரிய இளைஞனுக்கு பொலிஸார் போலியான காரணமொன்றை எழுதிக்கொடுத்த சம்பவமொன்று கிளிநொச்சிப்பகுதியில் அண்மையில் பதிவாகியுள்ளது.

கிளிநொச்சி – மாங்குளம் பிரதான வீதியில் தமிழ் இளைஞனுக்கு பொலிஸாரால் ஏற்பட்ட நிலை தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் வெளியிட்டுள்ள காணொளியில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அண்மையில் கிளிநொச்சி ,முறிகண்டி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இரண்டு போக்குவரத்து பொலிஸார் வந்து மோட்டார் சைக்கிளில் பிரேக் இல்லையா எனக்கேட்டனர்.

அதற்கு நான் உள்ளது ஆனால் அது போதாது என எனக்குத் தெரிந்த சிங்களத்தில் பதிலளித்தேன். அதற்கு அவர்கள் இதனை நீதிமன்றத்திற்கு எழுதுவதாக கூறினர். நான் அதற்கு பிரேக் மாத்திரமே பிரச்சினை என தமிழில் எழுதித்தரும்படி கூறினேன். அதற்கு அவர்இது ஸ்ரீலங்கா இங்கு என்ன மொழியில் எழுத வேண்டுமென என எனக்குத்தெரியுமென கூறினார்.

பின்னர் சிங்களத்தில் அதனை எழுதித்தந்தார்கள்.அதனை எனது நண்பர்கள் ஊடாக மொழிபெயர்ப்புச் செய்தபோது ஆபத்தான வாகன செலுத்துகை என எழுதியுள்ளனர்.ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை.

இதுதொடர்பில் குறித்த போக்குவரத்துப் பொலிஸாரை சந்தித்துக் கேட்டபோது அவர்கள் பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்தனர் எனக்குறிப்பிட்டுள்ளார்.