கோட்டாபயவின் நிர்வாகத்தின் கீழ் மனித உரிமை நிலை மோசமடைகிறது! சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கவலை

கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் கீழ் இலங்கையின் மனித உரிமை நிலைமை மோசமடைந்துள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது உலக அறிக்கை 2021 இல் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

மனித உரிமை ஆர்வலர்கள், கடந்த காலங்களில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளானவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் மீது படைத்தரப்பினரின் மிரட்டல் மற்றும் கண்காணிப்புகள் அதிகரித்துள்ளன.

சிறுபான்மை முஸ்லிம், தமிழ் சமூகங்கள் பாகுபாடு மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன.

நீதித்துறை சுதந்திரத்தை குறைக்கும் மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணையம் உட்பட்ட சுயாதீன நிறுவனங்களை பலவீனப்படுத்தும் ஒரு அரசியலமைப்பு திருத்தத்தை கோட்டாபயவின் அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.

கடந்த பெப்ரவரியில் நாட்டின் நீண்ட உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து உண்மை மற்றும் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான 2015 ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அனுசரணையில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகிக்கொண்டது.

இதனையடுத்து, முன்னைய அரசாங்கம் மேற்கொண்ட மனித உரிமை நன்மைகளை விரைவாக மாற்றியமைத்தது, இது, சிறுபான்மையினரை மிகவும் பாதுகாப்பற்றவர்களாக மாற்றியுள்ளது.

அத்துடன் கடந்த காலங்களில் மனித உரிமைகள் விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எச்சரிக்கையாகவும் உள்ளது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

போருக்குப் பின் மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்கத்தின் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றம் கூட தற்போது இராணுவப் பங்கால் ரத்து செய்யப்படுகிறது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மூத்த பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமித்துள்ளார்,

அவரைப் போலவே, 2009இல் முடிவடைந்த உள்நாட்டுப் போரின்போது பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மற்றும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உட்பட்டவர்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டார்கள் என்று கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்

கொரோனா தொற்றுநோய் ஏற்பட்ட பின்னர் முஸ்லிம்கள் வேண்டுமென்றே வைரஸை பரப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டனர். முஸ்லிம் வணிகங்களை புறக்கணிக்க சமூக ஊடங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பாரம்பரியம் மற்றும் சர்வதேச ஏற்றுக்கொள்ளலுக்கு புறம்பாக கொரோனாவினால் இறக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அரசாங்கம் தகனம் செய்து வருகிறது.

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூத்த இராணுவ அதிகாரிகள் முக்கிய பொது பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்

இந்தநிலையில் மனித உரிமை மீறல்களின் மோசமான பழைய நாட்களுக்கு மீண்டும் இலங்கை திரும்புவதைத் தடுக்க சர்வதேச அரசாங்கங்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று மீனாட்சி கங்குலி கோரியுள்ளார்.

அத்துடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.