இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றியே தீர்வோம் என முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன மற்றும் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார உட்பட புதிய பதவிகளுக்குத் தெரிவானவர்களை கொள்ளுப்பிட்டியிலுள்ள இல்லத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
1977களில் பெரும்பான்மையுடன் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஜே.ஆர்.ஜயவர்தனவின் பயணத்தையே நாம் தொடர வேண்டியுள்ளது.
அன்று ஜே.ஆர். உடன் இருந்த அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லர்.என்.ஜீ.பி. பண்டிதரட்ண, எனது தந்தை எஸ்மன்ட் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜீ.பி.சி. சமரசிங்க போன்றவர்கள் சிறந்த நிர்வாகசேவை உத்தியோகத்தர்கள் ஆவர்.
மறுபுறம் சிறில் மெத்திவ், ஆர்.பிரேமதாஸ, போல் பெரேரா, ஈ.எல். சேனாநாயக,வின்சன்ட் பெரேரா, காமினி மற்றும் லலித் போன்றவர்களும் இருந்தனர்.
இவர்கள் அனைவருமே நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. ஆனால், இவர்களை இணைத்துக் கொண்டுதான் 1977ஆம் ஆண்டில் ஜே.ஆர்.ஜயவர்தன ஆட்சியைக் கைப்பற்றும் போராட்டத்தைத் தொடங்கினார்.
எனவே, இவ்வாறான பயணத்தையே நாம் தொடங்க வேண்டியதுள்ளது. அன்றைய சூழலும் இன்றைய நிலைமையும் வெவ்வேறு என்றாலும் சிறந்த திட்டமிடலே எம்மை வெற்றி இலக்கை நோக்கிக் கொண்டுச் செல்லும்.
எனவே, கட்சியின் வெற்றி இலக்கை நோக்கிய திட்டத்தை தயாரிக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள்.
சாகல ரத்நாயக மற்றும் அனோமா கமகே ஆகியோர் இதற்குத் தலைமை தாங்கி ஆலோசனைகள் பெற்று திட்டத்தை வரைவார்கள்.
மிகக் குறுகிய காலத்தில் தற்போதைய அரசு மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்துள்ளது. எதிர்க்கட்சியும் அதே நிலையில் தான் உள்ளது.
ஹரின் மற்றும் ரஞ்சன் ஆகியோரை ஐக்கிய தேசியக் கட்சி தனிமைப்படுத்திவிடக் கூடாது.
அவர்களுக்கு ஏற்படக்கூடிய அநீதிகளின்போது நிச்சயம் குரல் கொடுக்க வேண்டும். தேவைப்படின் நீதிமன்றத்தின் ஊடாகவும் நடவடிக்கை எடுக்க முடியும் என கூறியுள்ளார்.