சிறீலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பகிரங்க அறிக்கை

எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பாக மிக காட்டமான அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பச்லெட் அம்மையார் சமர்ப்பிக்கவுள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரிற்கு முன்னதாக இதன் இறுதி வடிவம் பகிரங்கப்படுத்தப்படும்.

இந்த அறிக்கை தற்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிக்கை பகிரங்கப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, இலங்கையின் பதிலளிக்கும் உரிமைக்காக தற்போது, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்த வட்டாரங்களின் கூற்றுப்படி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக இதுவரை சமர்ப்பிக்கப்பட்டவற்றில், அதிக அழுத்தம் ஏற்படுத்தும் பிரேரணையாக இது அமைந்துள்ளது.

மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தமக்கு கிடைத்துள்ளதை இலங்கை வெளிவிவகார அமைச்சும் உறுதி செய்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 22ஆம் திகதி முதல் மார்ச் 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரமும் உள்ளடக்கப்படவுள்ளது.

அமர்வின் போது, ​​இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான பேரவையின் தீர்மானம் 30/1 ஐ அமுல்படுத்துவது குறித்து விரிவான அறிக்கையை இலங்கையும் சமர்ப்பிக்கும். இதன்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் உட்பிரிவுகளில் திருத்தம், அரசியல் கைதிகளின் வழக்குகளை மீளாய்வு செய்தல், புதிய ஆணைக்குழு ஒன்றை நிறுவுதல் போன்ற விடயங்களையும் இலங்கை உள்ளடக்கவுள்ளது.

அதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமை, மனித உரிமை விவகாரங்களில் அதன் கடமைகளை தற்போதைய மற்றும் முந்தைய அரசுகளில் தோல்வி குறித்தும் பச்லெட் அம்மையார் கரிசனை செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 மற்றும் கடந்த அரசும் இணை அனுசரணை வழங்கி 40/1 தீர்மானங்களில் இருந்து இலங்கை விலகியுள்ளது.

மனித உரிமைகள் பிரச்சினையில் முன்னேற்றத்தைக் காண்பிப்பதற்காக 2015 முதல் இந்த ஆண்டு மார்ச் வரை இரண்டு தீர்மானங்கள் மூலம் அரசுக்கு போதியளவு அவகாசம் வழங்கப்பட்டது.

இருப்பினும், அரசு தனது கடமையை நிறைவேற்றவில்லையென சர்வதேச சமூகம் மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்த பின்னணியில் இலங்கை மீது கிடுக்குப்பிடி பிடிக்க இம்முறை மனித உரிமைகள் பேரவை தீர்மானித்துள்ளது.