சிவகரனின் கூட்டு உளவுத்துறையின் பின்னணியா?கஜேந்திரகுமாருக்கு – சுமந்திரனுக்கும் வந்த நெருக்கம் சுரேஷ் சந்தேகம்

சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவதை கஜேந்திரகுமாரும், சுமந்திரனும் விரும்பவில்லை. இனப்படுகொலை என்பதையே நீக்கவே கஜேந்திரகுமார் விரும்பினார், கஜேந்திரகுமார் சொல்வதை சுமந்திரன் அப்படியே ஏற்றுக்கொள்கிறார். இந்த மாயம் எப்படி நடக்கிறதென தெரியவில்லை.

ஆவணத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் கையெழுத்திட்டிருக்க வேண்டியதே முறை. அப்பொழுதே ஆவணம் கனதியாகியிருக்கும்.

40-45 வருட போராட்ட வரலாற்றை கொண்டவர்கள் எல்லோரையும் தவிர்த்து, நேற்று வந்தவர்கள்தான் அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இது மிகவும் சின்னப்பிள்ளைத்தனமாகது என சுட்டிக்காட்டியுள்ளார் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க தமிழ் தரப்பினரின் நிலைப்பாடு என, முழுமை பெறாத- அரைகுறையாக முயற்சியொன்று நடந்ததை தமிழ் பக்கம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தது, அது தொடர்பில் இன்று சுரேஷ் பிரேமச்சந்திரன் விளக்கமளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி, வவுனியா, கொழும்பு மீண்டும் கிளிநொச்சி இப்படி பல கூட்டங்களுக்கு பிறகு ஒரு பொதுவான அறிக்கை தயாரிப்பிற்கு எல்லோரும் ஒன்றுபட்டார்கள்.

இன்னும் குறிப்பிடுவதாக இருந்தால் நாங்கள் மாத்திரம்தான் ஒரே ஒரு தமிழ்த் தேசிய வாதிகள் என்றும், மற்றவர்கள் எல்லாம் துரோகிகள் என்றும் சொல்லிய – நாங்கள் மாத்திரம் தான் இனப்படுகொலை என்பதை உலகமெங்கும் கொண்டுசென்றோம் மற்றவர்கள் வாய் துறக்கின்றார்கள் இல்லை என்று சொல்லி வந்தவர்களின் வரைபை நீங்கள் பார்த்தால் இனப்படுகொலை என்ற ஒரு வார்த்தை அதில் இல்லை.

அதற்கு பிற்பாடு எங்களது தரப்பில் இருந்து நான், சிவாஜிலிங்கம் போன்றோர் அது கொண்டுவரப்பட வேண்டும் என்றோம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பொறுப்புக் கூறல் நடவடிக்கைக்கு, விசாரணைக்கு அது கொண்டுபோகப்பட வேண்டுமாக இருந்தால் என்ன விசாரணையை குற்றவியல் நீதிமன்றம் செய்யப் போகின்றது? தொடர்ந்து நாங்கள் சொல்லிக்கொண்டு இருக்கக்கூடிய விடயம் என்ன? யுத்தத்துக்கு எதிரான குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரிப்பது. பின்னர், யுத்தகாலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் ஒரு பிரிக்கேடியர் கொலை செய்துவிட்டார் என்றோ அல்லது ஒரு மேஜர் ஜெனரல் கட்டளையின் பிரகாரம் கொஞ்ச பேர் கொலை செய்யப்பட்டது என்று அவர்களுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தண்டனை கொடுக்கலாம்.

இதனான் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்ந்து போகுமா, இலங்கையில் ஒரு இன அழிப்பு இடம்பெற்றது, அந்த இன அழிப்புக்கான மூல காரணிகள் யார்.

அது விசாரிக்கப்பட்டால் தான் நிச்சயமாக இலங்கை தமிழ் மக்கள் இன்னுமொரு இன அழிப்பில் இருந்து பாதுகாக்கப்படலாம்.

அந்த இன அழிப்பு என்பது சேர்க்கப்பட வேண்டும் என்று கூறியதுக்கு பின்னர்தான் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொன்னார், நீங்கள் அப்படி சொல்லுவதானால் நாம் அதை ஏற்றுக் கொள்ளுகின்றோம், எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை என சொல்லியிருந்தார்.

தம்மை தேசியவாதிகள் என கூறும் அவர்கள், இனப்படுகொலை விவகாரத்தை நாம் வலியுறுத்திய பின்னர்தான், அதை சேர்ப்பதில் தமக்கு பிரச்சனையில்லையென்றார்கள். பிறகு சுமந்திரன் சொன்னார், எனக்கு இதில் உடன்பாடு இல்லை ஆனாலும் நான் ஏற்று கொள்ளுகின்றேன் என்று.

சர்வதேச சுயாதீன விசாரணை ஆணையம் ஒன்றை – சிரியா பாணியில் கொண்டு வர வேண்டுமென நாம் கூறிய போது, ஒரு வருட காலஅவகாசத்தில் அதை ஏற்பதாக கஜேந்திரகுமார் கூறினார். பின்னர் சுமந்திரனும் ஏற்பதாக கூறினார்.

கஜேந்திரகுமார் ஏற்பதையெல்லாம் சுமந்திரன் எப்படி ஏற்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை.

இந்த நடவடிக்கை அனைத்தும் நடந்து முடிந்ததற்கு பிற்பாடு இதில் கையெழுத்து வைப்பதை ஒரு பிரச்சினையாக்கி, சிறுபிள்ளை தனமாக மாற்றினார்கள்.

இந்த தயாரிப்பில் பலபெருடைய பங்களிப்பு இருந்தது. கட்சிகள் என்று பார்க்கும் போது தமிழரசுக் கட்சி மிக பழமையானது. ஆயுதம் எடுத்து போராடிய கட்சிகளாக ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோது, புளொட் என இருக்கின்றன. பல பேர் இதில் இணைந்து இருக்கின்றார்கள். 40- 45 வருட அனுபவம் கொண்டவர்கள் அவர்கள்.

ஆனால் இவர்கள் யாரும் கையெழுத்து வைக்க கூடாது, நேற்று வந்தவர்கள் கையெழுத்து வைக்கலாமாம். இது எவ்வளவு தூரம் சரியான விடயம் என எனக்கு புரியவில்லை. மூவரும் கையெழுத்து வைப்பதென விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும், சுமந்திரனும் ஏற்றுக்கொண்டார்களாம். இதை சரியென எடுத்துக் கொள்ளுவோம்.

இதை மாற்றுவதில் என்ன பிரச்சினை இருக்கின்றது. மூவர் மட்டும் கையெழுத்திடுவது என்பதை மாற்றி அனைவரும் கையெழுத்திடுவோம், அப்பொழுது அந்த அறிக்கைக்கான கனதி கூடும் என்றோம்.

அவர்கள் சொன்ன கால எல்லைக்குள் கையெழுத்திட்டு அனுப்பினோம். ஆனால் அதை அவர்கள் ஏற்கவில்லை.

எமது கையெழுத்தை வாங்கினால், மாவை, செல்வம், சித்தார்த்தன் கையெழுத்திடுவார்கள். அதை வாங்குவதில் அவர்களிற்கு விருப்பமோ, விருப்பமில்லையோ நானறியேன். ஆனால் இது ஒரு சிறுபிள்ளைத்தனமான ஒரு விடயத்தை செய்துள்ளார்கள்..

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலையில் இருந்து சிவில் அமைப்புக்களின் கையெழுத்தை வாங்க முடியுமாக இருந்தால் யாழ்ப்பாணத்தில் இருக்கக்கூடிய கட்சி தலைவர்களுடைய கையெழுத்தை வாங்குவதில் என்ன சிக்கல் இருக்கின்றது.

மறுநாள்தான் அறிக்கையே அனுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த அறிக்கை அனுப்பப்பட்டதா என்பது யாருக்கும் தெரியாது.

அனைவரிடமும் கையொப்பம் வாங்கியிருந்தால் ஆவணத்தின் கனதி கூடியிருக்கும். அற்பசொற்ப பிரச்சனைகள் வந்திருக்காது.

நடைபெற்ற கூட்டத்தின் அழைப்பு கூட சரியான முறையில் அனுப்புப்பட்டதாக நான் அறியவில்லை. சிலர் அழைக்கப்பட்டனர். சிலருக்கு கூட்டம் நடந்ததே தெரியாது.

இந்த ஆவணம் வருவதற்கு முன்பாக விக்னேஸ்வரன் தலைமையில் நான், சிவாஜிலிங்கம், சிறிகாந்தா, அனந்தி கூடி நாங்கள் ஒரு ஆவணத்தை தயார் செய்து இருந்தோம்.அந்த ஆவணத்தில் நாங்கள் மிக முக்கியமான மூன்று கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.

குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும், சுயாதீன விசாரணை ஆணைக்குழு, சர்வசன வாக்கெடுப்பு கோரிக்கைகளை வைத்தோம்.

சர்வசன வாக்கெடுப்பு கோரிக்கையை சேர்த்துக்கொள்ள மாட்டோம் என கூறிவிட்டார்கள். ஏன் எனில் நாங்கள் இவ்வாறான கோரிக்கைகளை முன்வைக்க கூடாது என்பது சுமந்திரனுக்கும், கஜேந்திரகுமாருக்கும் இருந்த கருத்தாக இருந்தது. ஆகவே நாங்கள் அதனை கைவிட வேண்டிய தேவை வந்தது கைவிட்டோம்.

நாங்கள் தயாரித்த அறிக்கை அவர்களுக்கும் கொடுக்கப்பட்டது, இது எல்லாம் அவர்களுக்கு கிடைத்ததன் பிற்பாடு, அவர்கள் தயாரித்த அறிக்கையில் இனப்படுகொலை இல்லை என்பதை காட்டித்தான் அவர்கள் அறிக்கை கொண்டுவந்தார்கள். நாம் போராடித்தான் மாற்றினோம் என தெரிவித்துள்ளார்.