புதிய அரசியலமைப்பிற்கான எதிர்க்கட்சியின் பரிந்துரைகளை விரைவில் கையளிப்போம் – கிரியெல்ல

பாராளுமன்றத்தில் உருவாக்கப்பட வேண்டிய புதிய அரசியலமைப்பை அரசாங்கத்திற்கு நெருக்கமான சட்டத்தரணிகளை மாத்திரம் உள்ளடக்கி உருவாக்குவதற்கு இடமளிக்க முடியாது. புதிய அரசியலமைப்பிற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பரிந்துரைகள் விரைவில் அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அரசியலமைப்பு உருவாக்கத்தை சர்வதேசம் உன்னிப்பாக அவதானிக்கிறது – லக்ஷ்மன் கிரியெல்ல | Virakesari.lk

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

புதிய அரசியலமைப்பிற்காக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள குழுவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பரிந்துரைகளை முன்வைக்குமாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளின் மூலமும் குழுவில் அங்கத்துவம் பெறுகின்ற சட்டத்தரணிகளினூடாக மாத்திரம் புதிய அரசிஙலமைப்பை உருவாக்க இடமளிக்க முடியாது. நாட்டு மக்கள் அனைவரின் விருப்பு வெறுப்புக்களுக்கு அமையவே அரசியலiமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

சோல்பரி அரசியலமைப்பு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு அதில் சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உறுப்புரை உள்ளடக்கப்பட்டிருந்தது.

சுதந்திரத்தை அடுத்த இரு அரசியலமைப்புக்கள் உருவாக்கப்பட்ட போதிலும் அவை இரண்டுக்குமே சிறுபான்மையினரின் ஆதரவு கிடைக்கவில்லை. எனவே அனைத்து இன மக்கள் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய பாராளுமன்றம் அரசிலயமைப்புசபையாக மாறி அதற்கமைய புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். இவ்வாறான எமது நிலைப்பாடுகளை உள்ளடக்கி நாம் அரசாங்கத்திற்கு கடிதம் அனுப்புவோம்.

எமது ஆட்சியில் அரசியலமைப்பு குறித்த 20 குழுக்கள் நியமிக்கப்பட்டன. அதில் பலவற்றின் தலைவர்களாக அப்போதைய எதிர்க்கட்சி பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர்.

75 தடவைகள் இந்த குழு கூடியுள்ளது. எனினும் 2018 அரசியல் சூழ்ச்சியின் பின்னர் அந்த செயற்பாடுகள் முடங்கிவிட்டன. எம்மால் முன்னெடுக்கப்பட்ட இந்த செயற்பாடுகளை பின்பற்றுமாறு வலியுறுத்துகின்றோம். மாறாக அரசியலமைப்பை உருவாக்கும் பொறுப்பை சட்டத்தரணிகளிடம் மாத்திரம் ஒப்படைக்க முடியாது.

அரசியலமைப்பு என்பது அரசாங்கம் மட்டும் அல்ல. அரசாங்கத்திற்கு தேவையான வகையில் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் அது வெற்றியளிக்காது. எனவே புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாயின் நாம் நிறுத்திய இடத்திலிருந்து ஆரம்பிக்குமாறு கோருகின்றோம். பாராளுமன்றத்தினூடாக செய்து முடிக்கக் கூடிய விடயத்தை தமக்கு நெருக்கமான சட்டத்தரணிகள் ஊடாக செய்ய முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு ஒருபோதும் எம்மால் இடமளிக்க முடியாது.

கடந்த வருடம் மார்ச் மாதம் வரை விமான நிலையம் திறக்கப்பட்டிருந்த போதே நாட்டில் கொவிட் பரவல் ஆரம்பித்துவிட்டது. எனவே இப்போது இவர்கள் மீண்டும் விமான நிலையத்தை திறப்பதன் மூலம் கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்கள் இறக்கட்டும். வாழ்பவர்களுடன் ஆட்சியை முன்னெடுத்துச் செல்வோம் என்ற போக்கில் செல்வதையே காண்பிக்கிறது.

2015 க்கு முன்னர் விறக்கப்பட்ட தேசிய சொத்துக்கள் நல்லாட்சி அரசாங்கத்தால் மீட்க்கப்பட்டன. ஆனால் தற்போதைய அரசாங்கம் எம்மீது வீண் பழி சுமத்துகிறது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் 49 வீத உரிமத்தை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமே இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடுமளவிற்கு சீனாவிற்கு இடமளித்தது. அவருக்கு முன்னர் இருந்த எந்தவொரு ஜனாதிபதியும் இவ்வாறு செயற்படவில்லை.

தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு உலக வங்கியிடம் அரசாங்கம் கடன் கேட்கிறது. இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். அமைச்சர்கள் சிலர் வெளியில் கூறாமல் தடுப்பூசிகளை இட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தான் அவர்கள் அச்சமின்றி பல்வேறு இடங்களுக்கும் செல்கின்றனர் என்றார்.