ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு கடுமையானது – லக்ஷ்மன் கிரியெல்ல

வழக்கு தீர்ப்பொன்றை பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் விமர்சிக்க முடியும். உலக நாடுகளிலும் நீதிமன்ற தீர்ப்புகள் வெளிப்படையாக விமர்சிக்கப்படுகின்றன. அத்துடன் ரஞ்சனுக்கு வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு மிகவும் கடுமையானதாகும் என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ உரையாற்றிக்கொண்டிருக்கும்போது, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு குறித்து உரையாற்றிக்கொண்டிருக்கும்போது, அதனை எதிர்த்து சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ்குணவர்த்தன, நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிப்பது நிலையியற் கட்டளைக்கு முரணாகும் என தெரிவித்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஆனால் தீர்ப்புவழங்கிய நீதிபதிகளை விமர்சிக்க முடியாது. ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு, அவர் தெரிவித்த கருத்துக்கு சமாந்தரமான தீர்ப்பு அல்ல. மிகவும் கடுமையான தீர்ப்பு.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் நீதிபதி ஒருவர் பிரதம நீதியரசரை மோசடிக்காரர் என தெரிவித்திருந்தார். அதற்காக அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு ஒரு ரூபாய் தண்டமாகும். அதனையும் அவர் செலுத்த மறுத்துள்ளார். தற்போது அந்த தீர்ப்பு திகதி ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.

அதனால் இன்று நீதிமன்றங்களை விமர்சிப்பது பேச்சு சுதந்திரத்துக்கு சமமாகவே செல்கின்றது. ஆரம்ப காலங்களிலேயே நீதிமன்றங்களை விமர்சிப்பது மிகவும் பாரதூரமான குற்றமாக இருந்தது. தற்போது உலகில் அந்த நடைமுறை எங்கும் இல்லை. நீதிமன்றங்களினால் தவறான தீர்ப்பு வழங்கும்போது அதனை திருத்தயமைக்க ஜனாதிபதிக்கு முடியும். அன்று ஞானசார தேரருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியபோது, மைத்திரிபால சிறிசேன, அந்த தீர்ப்பின் கடுமையை உணர்ந்து அவருக்கு பொது மன்னிப்பு வழங்கினார்.

அத்துடன் நீதிமன்றங்களில் இருப்பதும் எம்மைப்போன்ற மனிதர்கள். அவருக்கும் தவறு ஏற்படலாம். அதற்காகத்தான் மேன்முறையீடுகள் செய்யப்படுகின்றன. அதனால் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு மிகவும் கடுமையானதாகும். ரன்சன் ஒருவிடயத்தையே தெரிவித்தார். அதாவது நாட்டில் இருக்கும் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளில் அதிகமானவர்கள் ஊழல்வாதிகள் என்றே தெரிவித்தார்.

அதற்கு ஒரு உதாரணத்தை தெரிவிக்கின்றேன். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்னாள் பிரதம நீதியரசர் மோஹான் பீரிஸ் சொன்ன விடயம்தான், என்னை பிரதமர் நீதியரசர் பதவியில் இருந்து நீக்கவேண்டாம். உங்களுக்கு தேவையானமுறையில் வழக்கு தீர்ப்புகளை வழங்குவதாக தெரிவித்திருந்தார். அதனையே ரஞ்சன் தெரிவித்திருக்கின்றார்.

அதேபோன்று சிறைச்சாலைக்கு அனுப்பவேண்டியவரை அரசாசனத்துக்கு அனுப்பியதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்திருந்தார். அதனால் நீதிமன்ற தீர்ப்புகள் தொடர்பில் விமர்சிப்பதை சிலர் ஆதரிக்கின்றனர். சிலர் எதிர்க்கின்றனர். அதனை விளங்கிக்கொண்டு நாங்கள் செயற்படவேண்டும் என்றார்.