இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள், மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், பொறுப்புக்கூறல் விடயங்கள் குறித்தும் ஆராய்வதற்காக நியமிக்கபப்ட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீண்டும் பரிசீலிக்க மூன்று உறுப்பினர்களைக் கொண்ட விசாரணை ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
இது குறித்த வர்த்தமானி அறிவிப்பு நேற்றையதினம் (21) வெளியிடப்பட்டது.
உயர் நீதிமன்ற நீதிபதி திரு. ஏ.எச்.எம்.டி. நவாஸ் விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிரி ஆகியோர் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து விசாரிக்க ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளமையால் அது குறித்து விசாரணைகளை செய்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காகவே மூன்று பேர் கொண்ட ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.