யாழ். பல்கலையில் நினைவுத்தூபி அமைக்க முள்ளிவாய்க்காலில் இருந்து மண் சேகரிப்பு

யாழ். பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்காக முள்ளிவாய்க்கால் மண்ணிலிருந்து மண் சேகரிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் முதல் பொலிகண்டிப் போராட்டம் நேற்று முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் நினைவுத் திடல் வரை சென்றதுடன் போரில் உயிரிழந்த தமிழ் மக்களுக்காக அங்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் அங்கு நினைவிடத்தின் மண், மாணவர்களால் சேகரிக்கப்பட்டது. இதில், வேலன் சுவாமிகள், கிறிஸ்தவ மதகுரு லியோ ஆம்ஸ்ரோங் மற்றும் சிலர் கலந்துகொண்டனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அண்மையில் இடித்தழிக்கப்பட்ட நிலையில், கடும் எதிர்ப்பலையையடுத்து குறித்த இடத்தில் மீண்டும் அதே நினைவுத் தூபி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.