தடுப்பூசி செலுத்தக்கூடிய 4,000 மையங்களுக்கான இடங்களை அடையாளம் கண்டுள்ள அரசாங்கம்

அனைத்து இலங்கையர்களுக்கும் மூன்று மாதங்களுக்குள் தடுப்பூசிகளை செலுத்துவதற்கும் அந்த பணியை முடித்த உலகின் முதல் நாடாக திகழ்வதற்கும் ஒருவழிமுறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கொரோனா தொற்று நோய்கட்டுப்பாட்டு அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி அமல் ஹர்ஷ டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தக்கூடிய 4,000 மையங்களை அமைப்பதற்கான இடங்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டால், தடுப்பூசி திட்டத்தை மூன்று மாதங்களுக்குள் இலங்கையால் நிறைவு செய்ய முடியும்.

தடுப்பூசிகளுக்கு அதிக தேவை உள்ளது. ஆனால் குறைவான நிரம்பல் இருப்பதால் இந்த திட்ட நிறைவேற்றமானது இலங்கைக்கு தடுப்பூசிகள் கிடைப்பதைப் பொறுத்தது என்று செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்தியாவில் இருந்து 18 மில்லியன் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தடுப்பூசிகளைக் கொண்டு வருவதற்காக ரஷ்யா மற்றும் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.