இராணுவ ஆட்சி ஒன்று வருவதற்கு இடமளித்தால், அதைப் போகச் செய்வது மிகவும் கடினமே ..

மியான்மாரில் திங்கட்கிழமை (01) அரங்கேறிய இராணுவச் சதி, ஆசியச்சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 2020ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலை அடுத்து, புதிய பாராளுமன்றம் திங்கட்கிழமை கூடவிருந்த நிலையில், மியான்மாரிய இராணுவம், தனது மூன்றாவது இராணுவச் சதியை அரங்கேற்றியது.

மியான்மாருக்கு இராணுவச் சதியும் இராணுவ ஆட்சியும் புதிதல்ல. ஆனால், மாறிவரும் உலக ஒழுங்கில், கொவிட்-19 நோயின் நெருக்கடிக்கு மத்தியில், ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாதளவு சவாலுக்கு உட்பட்டுள்ள நிலையில், இந்த இராணுவச் சதி முக்கியத்துவம் வாய்ந்தது.

பர்மா என்று பொதுவில் அறியப்பட்ட மியான்மார், பிரித்தானியா கொலனி ஆதிக்கத்திலிருந்து, 1948ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. ஏனைய பிரித்தானியக் கொலனிகள் போலன்றி, பொதுநலவாய அமையத்தில் மியான்மார் இணையவில்லை.

இன்று இந்தியாவின் மாநிலங்களாக இருக்கின்ற அசாமும் மணிப்பூரும், ஒருகாலத்தில் மியான்மாரின் பகுதிகளாக இருந்தவை. மிகவும் சிக்கலான இனத்துவ முரண்பாடுகளைக் கொண்டதொரு நாடு, மியான்மார் என்பது இங்கு முக்கியமானது.

1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது முதல், பல்வேறு இனக்குழுக்கள் சுதந்திரத்துக்காகவும் சுயநிர்ணய உரிமைக்காகவும் இன்றுவரை போராடி வருகின்றன. உலகிலேயே மிக நீண்ட உள்நாட்டுப் போர் நடக்கின்ற நாடாக, மியான்மார் அறியப்படுகிறது.

சுதந்திரத்துக்குப் பின்னரான பர்மா, பாராளுமன்ற ஜனநாயக முறையில் ஆட்சிசெய்யப்பட்டாலும், இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள், அதிகாரம் பகிரப்படாமை, ஒற்றையாட்சி முறை என்பன, நெருக்கடியான அரசியல் சூழலை ஏற்படுத்தியது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி, 1962ஆம் ஆண்டு, இராணுவத் தளபதி ஜெனரல் நீ வின், இராணுவச் சதியை மேற்கொண்டு ஆட்சிக்கவிழ்ப்பை மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, மியான்மாரில் இராணுவ ஆட்சி நிறுவப்பட்டது. 1988ஆம் ஆண்டுவரை இவ்வாட்சி தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து, 1988இல் நீவினின் ஆட்சிக்கு எதிராக, மாணவர் போராட்டங்கள் தொடங்கின. இதை வாய்ப்பாக்கிய மியான்மாரிய இராணுவம், இன்னொரு ஆட்சிக்கவிழ்ப்பைச் செய்து, நீவினின் ஆட்சியைக் கலைத்து, இன்னோர் இராணுவ ஆட்சியை நிறுவியது.

அந்த ஆட்சி, 1990ஆம் ஆண்டு, சுதந்திரமான தேர்தல்களை நடத்தியது. இதில் ஆன்சாங் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி, பெருவெற்றி பெற்றாலும் இராணுவம் முடிவுகளை ஏற்க மறுத்துவிட்டது. புதிய இராணுவ ஆட்சி 2011ஆம் ஆண்டுவரைத் தொடர்ந்தது.

மியான்மாரில் இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மியான்மாரிய மக்களின் நெடுங்காலப் போராட்டத்தின் விளைவாக, 2008ஆம் ஆண்டுமுதல், அரசியல் சீர்திருத்தங்கள் காரணமாகின. இதில் முதன்மையானது, 2008ஆம் ஆண்டு அங்கிகரிக்கப்பட்டு, தற்போதும் நடைமுறையில் உள்ள புதிய அரசியல்யாப்பாகும். இதை ஜனநாயகப்படுத்தலின் முக்கிய பகுதியாகப் பலர் கொண்டாடினார்கள்.

இது தொடர்பில் இரண்டு விடயங்கள் கவனிப்புக்குரியவை. முதலாவது, இப்புதிய யாப்பின்படி பாராளுமன்றத்தின் கீழவை, மேலவை ஆகிய இரண்டிலும் காற்பங்கு உறுப்பினர்கள் இராணுவத்தால் நியமிக்கப்படும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.இதன்மூலம் இராணுவத்தின் ஆசியின்றி யாப்புத்திருத்தம் சாத்தியமில்லை.

இரண்டாவது, இந்த யாப்பை அங்கிகரிப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை இராணுவமே நடத்தி முடித்தது. எனவே, அதன் ஜனநாயகத்தன்மையும் சுதந்திரமும் கேள்விக்குரியது.

இந்நிலையில், வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆன்சாங் சூகி இவ்விரண்டையும் ஏற்றுக்கொண்டு, ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்தார். 2015ஆம் ஆண்டு தேர்தலில் பெருவெற்றி பெற்று, ஜனநாயக ஆட்சியை அமைத்தார்.

இராணுவஆட்சியின் போது, தன்னை ஜனநாயகத்தின் காவலராகக் காட்டிக் கொண்ட ஆன்சாங் சூகி, ஆட்சிப்பீடம் ஏறியதும், தன்னை ஒரு பெருந்தேசியவாதியாக அடையாளப்படுத்தினார்.

இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது, தனது அரசியல் இருப்புக்கும் எதிர்காலத்துக்கும் அது தவிர்க்கவியலாதது என நம்பினார். இரண்டாவது, இராணுவத்துடனான நல்லுறவுக்கு ‘ஜனநாயகக் காவலர்’ என்ற விம்பத்தை விட, ‘தேசியவாதி’ என்ற பிம்பம் பயனுள்ளது என்று எண்ணினார். இவரது முதலாவது ஆட்சிக்காலத்தில், சிறுபான்மையினருக்கு எதிரான கொடுமைகள் நடந்தேறின.தனது அரசாங்கத்தின் இச்செயல்களை, ஆன்சாங் சூகி நியாயப்படுத்தினார்.

இந்தப் பின்புலத்திலேயே, கடந்தாண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடந்தது. இவரது தேசியவாதப் பிம்பமும், இன்னோர் இராணுவ ஆட்சியை அனுமதிக்கக்கூடாது என்ற மக்களின் உறுதியும் இணைந்து, ஆன்சாங் சூகியின் கட்சிக்கு, அறுதிப் பெரும்பான்மை வெற்றியை வழங்கியது.

 

இந்தத் தேர்தலில், முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக இராணுவம் குற்றம் சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்க, தேர்தல் ஆணையம் மறுத்துவிட்ட நிலையில் இராணுவச்சதி அரங்கேறியுள்ளது.

அரங்கேறியுள்ள இராணுவச்சதியும் அதற்கான பின்புலமும், சில முக்கியமான பாடங்களைக் கற்றுத் தருகின்றன. குறிப்பாக, இராணுவத்தின் செல்வாக்கு அதிகமாக உள்ள ஆசிய நாடுகள், கணிப்பில் எடுக்க வேண்டிய பாடங்களாகும்.

இன்று, ‘ஜனநாயகம்’ என்று விளிக்கப்படுவது, மேற்குலகின் தாராண்மைவாத அடிப்படைகளைக் கொண்டமைந்த முதலாளித்துவ ஜனநாயகமாகும். இது, மக்கள் ஜனநாயகம் அல்ல! இந்த முதலாளித்துவ ஜனநாயக ஆட்சி ஏற்படுத்துகின்ற விளைவுகளால் (உழைப்புச் சுரண்டல், மக்கள் விரோத நடவடிக்கைகள், அதீத இலாமீட்டல், தனியார் மயமாக்கல்) தவிர்க்கவியலாமல் ஜனநாயக ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கு இராணுவத்தை அணுகுகிறது. மெதுமெதுவாகப் பொது அலுவல்களில் இராணுவம் செல்வாக்குச் செலுத்துகிறது. காலப்போக்கில், மறைமுகமாக ஆட்சியில் குறித்த பங்கை ஆற்றுமொன்றாக மாறிவிடுகிறது.

தேசியவாதமும் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் கூர்மையடைந்த சமூகங்களிலும் உள்நாட்டுப் போர்கள் நடக்கின்ற நாடுகளிலும், இராணுவம் இலகுவில் ஆட்சியில் செல்வாக்குச் செலுத்தத் தொடங்குகிறது. இது காலப்போக்கில், ஆட்சியாளர்கள் இராணுவத்தின் தயவிலேயே இயங்கத் தலைப்படுகிறார்கள்.

சில சமயங்களில், பின்னணியில் இருந்து இயக்கும் இராணுவம் சலிப்படைந்து, நேரடியாக ஆட்சியைக் கைப்பற்றுகின்றது. சிலவற்றில், அவை தொடர்ந்தும் மறைமுகமாகக் கட்டுப்படுத்துகின்றன. பொது அலுவல்களில், அரசாங்கத்தின் நிர்வாகத்தில் ஒருபோதும் இராணுவம் பங்களிக்கவோ, தலையிடவோ, முடிவெடுக்கவோ அனுமதிக்கப்படக்கூடாது.

அவ்வாறு அனுமதிக்கப்படும் போது, பொது அலுவல்கள் மெதுமெதுவான இராணுவ மயமாகி நிறுவனப்படுத்தலுக்கு உள்ளாகும். இது இராணுவ ஆட்சியை நோக்கிய பயணத்தில் முக்கியமான ஒரு படி. இராணுவம் மெதுமெதுவாகப் பொதுவெளிகளைக் கட்டுப்படுத்தத் தொடங்குவது இதன் அடுத்த படி.

இராணுவம் இவ்வாறு பொது அலுவல்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்து, அரச அலுவல்களில் ஆழமாகக் காலூன்றக் காத்திருக்கிறது. மிகப்பெரிய நெருக்கடியோ, நிச்சயமின்மையோ நாட்டில் நிலவுகின்ற போது, அதைக் காரணங்காட்டி ஆட்சியைக் கவிழ்த்து இராணுவம் தனது ஆட்சியை நிறுவுகிறது.

நீண்டகால இராணுவ ஆட்சிகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டாலும், அரச அலுவல்களில் இருந்து இராணுவத்தை முழுமையாக நீக்குவது மிகவும் சிரமமான நேரமெடுக்கின்ற பணி. பெரும்பாலும் இராணுவத்தை பொது அலுவல்களில் இருந்து விடுவித்து முழுமையான ஜனநாயகத்தை நிறுவுவதற்கிடையில் இராணுவம் திருப்பித் தாக்கும். இத்தாக்குதல் ஜனநாயகத்துக்குச் சாவுமணி அடிக்கும்.

இலங்கை அரசாங்கம், தன்னைத்தானே பலவிதமான நெருக்கடிகளுக்குள் ஆழ்த்தி வருகிறது. அதன் வீழ்ச்சி தவிர்க்க இயலாதது; எனினும், அது எவ்வகையான வீழ்ச்சியாயிருக்கும் என்பது பற்றியதே கவலை. இப்போது எந்தவொரு பாராளுமன்ற அரசியல் கட்சியையும் மக்கள் நம்பவில்லை.எனவே, பாராளுமன்றத்துக்கு வெளியே இரண்டு வகையான தெரிவுகள் உள்ளன. ஒன்று, மக்கள் அரசியல் மூலம் ஏற்படக்கூடிய ஓர் அடிப்படையான சமூக மாற்றம். மற்றையது, இராணுவ ஆட்சி.இப்போதுள்ள ஆட்சியிலிருந்து சிறிய ஒரு நகர்வு மட்டுமே, ஓர் இராணுவ ஆட்சி ஏற்படப்போதுமானது.

மனித உரிமையின் பேரால், ஓர் இராணுவச் சர்வாதிகாரம் இயலுமானது. இலங்கைக்கு உறுதியான ஓர் அரசாங்கம் தேவை என்பதும் அதற்குச் சாதகமானது.இன்றைய ஆட்சியாளர்கள், ஜனநாயக உரிமைகளை எல்லாம் பறித்த பின்னால், எந்த ஆட்சியும் பரவாயில்லை என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்களேயானால், மாறி மாறி ஆண்ட ஆட்சியாளர்களது ஊழல் காரணமாக, அரசியல்வாதிகள் பற்றி நம்பிக்கையற்றுப் போவார்களேயானால், ஓர் இராணுவ ஆட்சிக்கு அதிகம் எதிர்ப்பு இல்லாமல் போகலாம். நிலைபெற்ற ஓர் இராணுவ ஆட்சிக்கு, அந்நிய ஆதரவு எளிதாகவே கிடைக்கலாம்.

ஒரு ஜனநாயக ஆட்சி எவ்வளவு குறைபாடானதாக இருந்தாலும் அதனிடத்தில் ஓர் இராணுவ ஆட்சி வருவது மிகவும் ஆபத்தானது. பாகிஸ்தான், மியான்மார், பங்களாதேஷ் ஆகிய நாடுகளினது அனுபவங்களிலிருந்து கற்க வேண்டிய முக்கியமான பாடம், இராணுவ ஆட்சி ஒன்று வருவதற்கு இடமளித்தால், அதைப் போகச் செய்வது மிகவும் கடினம். போகச் செய்தாலும் அது விரைவில் மீளும் என்பதை, மியான்மார் இப்போது எமக்கு உணர்த்தியுள்ளது.