ட்ரம்பின் பதவி நீக்க விசாரணை ஜனநாயகக் கட்சியினரின் அரசியல் நாடகம்: ட்ரம்ப் வழக்குரைஞர்கள் சாடல்

அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான பதவி நீக்க விசாரணை, ஜனநாயகக் கட்சியினரின் அரசியல் நாடகம் என ட்ரம்ப் வழக்குரைஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ட்ரம்பின் பதவி நீக்கத் தீர்மானத்தின் மீது மேலவையான செனட் அவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணை நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு தங்கள் தரப்பு முதல் கட்ட வாதத்தை ட்ரம்ப் வழக்குரைஞர்கள் செனட் அவையில் நேற்று தாக்கல் செய்தனர்.

இதில் கூறியிருப்பதாவது, ‘ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் குறித்து சந்தேகம் தெரிவித்த ட்ரம்ப், அவருக்கான சட்ட உரிமைகள்படியே நடந்துகொண்டார். அரசியல் சாசனத்தின் முதல் திருத்தத்தின் கீழ் அவருக்கு முழு கருத்து சுதந்திரம் உள்ளது.

நாடாளுமன்றத்தில் போராட்டக்காரர்கள் நடத்திய கலவரத்துக்கு அவரை பொறுப்பாக்க முடியாது. மேலும், அவர் இப்போது ஜனாதிபதி பதவியிலிருந்து சென்றுவிட்ட நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து செனட் அவை விசாரிப்பது சட்ட விரோதம்.

ஜனநாயக கட்சியினரும் பிரதிநிதிகள் சபைத் தலைவரும் தேசத்தின் நலனில் கவனம் செலுத்துவதை விடுத்து, சுயநோக்கத்துக்காகவும் அரசியல் காரணங்களுக்காகவும் பதவி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்’ தெரிவிக்கப்பட்டுள்ளது.