ஜெனிவா தீர்மானம் தொடர்பில் இலங்கையின் முடிவு!அனைத்து நாடுகளிடமும் பகிரங்க வேண்டுகோள்

இலங்கைக்கு எதிராக எந்தவொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அனைத்து உறுப்பு நாடுகளும் எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வின் போது காணொளி ஊடாக பேசிய வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்தன இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இலங்கையில் தேசிய நல்லிணக்கம், நிலையான அமைதி மற்றும் மனித உரிமைகள் பொறுக்கூறல் போன்ற விடயங்களில் ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், அநாவசியமான அழுத்தங்களையும், தலையீடுகளையும் இலங்கை விரும்பவில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஜெனீவாவில் 2015 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கைக்கு எதிரானது, நிறைவேற்றப்பட முடியா விடயங்களை உள்ளடக்கியது எனவும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

“2015 இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தீர்மானத்திற்கு இணை அணுசரனை வழங்கியது. இது எங்கள் நாட்டிற்கு எதிரானது.அந்த தீர்மானம் நிறைவேற்றமுடியாத பல விடயங்களை உள்ளடக்கியதாக காணப்பட்டது.

மேலும் அந்த தீர்மானங்கள் இலங்கையின் அரசமைப்பிற்கு முரணாக காணப்பட்டன.நவம்பர் 2019 இல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு மக்கள் வழங்கிய ஆணை ஜெனீவா தீர்மானத்தை இலங்கை மக்கள் நிராகரித்ததை தெளிவாக வெளிப்படுத்தியது.

இந்த ஆணையை அடிப்படையாக வைத்து நான் இலங்கை இணை அணுசரணை வழங்கிய தீர்மானத்திலிருந்து வெளியேறும் என நான் அறிவித்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் முன்னொருபோதும் இல்லாத பிரச்சார நடவடிக்கை காணப்படுகின்றது.

மூன்று தசாப்தகால யுத்தத்தின் பின்னர் இலங்கை படையினர் விடுதலைப்புலிகளை செயல் இழக்கச்செய்தனர்.

இலங்கை அரசாங்கம் நாட்டின் ஒருமைப்பாடு, இறைமை ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றை உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்பிடமிருந்து பாதுகாப்பதற்காக தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது என அவர் மேலும் கூறியுள்ளார்.