வடக்கு கிழக்கில் தரம்- 1இற்கான மாணவர் தொகையில் பாரிய வீழ்ச்சி: இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்

2021ஆம் ஆண்டு பாடசாலைகளில் தரம்- 1ற்கு இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களைவிட மிகவும் குறைவானதாகும். இது அபாயகரமானது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் முதலாம் தரத்திற்கு இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கால் குறைவடைந்துள்ளது. இந்நிலைமை அபாயகரமானது. உலக மக்கள் தொகை வருடந்தோறும் அதிகரித்துச் செல்கின்றதே தவிர குறைவடைவதில்லை. இலங்கையிலும் அதே நிலைதான். ஆனால் தமிழர் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இம்முறை மாணவர் தொகை குறைவடைந்துள்ளமை கவலையான விடயம் என்பதற்கு அப்பால் அபாயகரமானது.

 

நாட்டில் நடைபெற்ற யுத்தமானது நான்கு தசாப்தங்களைக் கடந்தது. அந்தக் காலங்களில்கூட பாடசாலைக்கு முதலாந் தரத்தில் இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்தே சென்றது. ஆனால் இம்முறை வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கில் மாணவர் எண்ணிக்கை குறைவடைந்தமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான காரணங்களில் பிறப்பு வீதம் குறைவடைந்தது என தனியாகக் கூறிவிடமுடியாது. நாட்டின் பொருளாதாரநிலை மிகவும் முக்கியமானது. இதைவிட கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பெருமளவானோர் நகர்ப்புறத்தை நோக்கி நகர்ந்துள்ளனர். அதற்கு தொழில் வாய்ப்பு ஒருகாரணம் என்பதற்கு அப்பால் பாரம்பரிய தொழில்கள் பல அழிவடைந்துள்ளன. இதனால் வருமானமின்றி பிள்ளைகளை வளர்க்க முடியாத அளவிற்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர். அரச சேவையில் உள்ள பலர் வங்கிகளில் பெருமளவு பணம் கடனாகப்பெற்று வாழ்க்கை நடாத்துகின்றனர் என்றார்.