அமெரிக்க பசுபிக் பிராந்திய விமானப் படைத்தளபதி ஜெனரல் கென்னெத் எஸ் வில்ஸ்பெச் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு ) கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அமெரிக்க பசுபிக் பிராந்திய விமானப் படைத்தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆயியோருக்கிடையில் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இலங்கை விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளுக்கு உத்தியோகபூர்வமாக அழைக்கப்பட்ட அமெரிக்க பசுபிக் பிராந்திய விமானப் படைத் தளபதி, தனது நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமாகவே இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள இவர், அமெரிக்க பசுபிக் பிராந்திய விமானப்படைக்கு கட்டளையிடும் அதிகாரியாகவும், அமெரிக்க இந்தோ – பசுபிக் கட்டளையகத்தின் விமானங்கள் மற்றும் அதனோடிணைந்த விமான தளவாடங்களுக்கு கட்டளையிடும் அதிகாரியாகவும் செயற்படுகின்றார்.
இதேவேளை, இந்த சந்திப்பினை நினைவு கூரும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இந்த சந்திப்பில் இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரணவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.