தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஈராக்கில் பாப்பரசர்

இது ‘நாகரிகத்தின் தொட்டில்’. இங்கு ஆயுத மோதல்கள் அமைதியாகட்டும். வன்முறை, தீவிரவாதம், பிரிவினை மற்றும் சகிப்பின்மை போன்றவை முடிவுக்கு வரட்டும். ஈராக் பல போர்களின் பேரழிவு விளைவுகளை சந்தித்துள்ளதென பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.

 

கொரோனா வைரஸ் பரவலையடுத்து தன்னுடைய முதல் சர்வதேச பயணமாக பாப்பரசர் பிரான்சிஸ் ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஈராக் ஜனாதிபதி பர்ஹாம் சாலிஹ் பாப்பரசரை வரவேற்ற பின்னர் அங்கு உரையாற்றிய பாப்பரசர் பிரான்சிஸ்,

“நான் ஈராக்கிற்கு விஜயம் மேற்கொண்டதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இது ‘நாகரிகத்தின் தொட்டில்’. இங்கு ஆயுத மோதல்கள் அமைதியாகட்டும். வன்முறை, தீவிரவாதம், பிரிவினை மற்றும் சகிப்பின்மை போன்றவை முடிவுக்கு வரட்டும். ஈராக் பல போர்களின் பேரழிவு விளைவுகளை சந்தித்துள்ளது.

இந்த நிலத்தில் வாழும் கிறிஸ்தவர்கள், இந்த தேசத்தின் வாழ்க்கைக்கு அவர்கள் அளித்த பங்களிப்புகள், ஒரு வளமான பாரம்பரியத்தை உருவாக்குகின்றன. அத்துடன், தங்களது இந்த பணியை அவர்கள் தொடர்ந்து செயல்படுத்த விரும்புகின்றனர்” என்று பாப்பரசர் தெரிவித்தார்.

 

இதேவேளை, கொவிட்  மற்றும் பாதுகாப்பு காரணமாக அவர் பாப்பரசர் மேற்கொள்ளும் ஆபத்தான பயணம் இது என்றும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், இது தனது கடமை என்று பாப்ரசர் தெரிவித்துள்ளார். மேலும், ஈராக் பல ஆண்டுகளாகத் துன்பத்துக்கு ஆளாகியிருப்பதால், தாம் அங்கு செல்லக் கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாப்ரசர் பிரான்சிஸ் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதுடன் அவருடன் ஈராக்கிற்கு விஜயம் செய்யும் அதிகாரிகளும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பாப்பரசரின் ஈராக்கிற்கான விஜயத்தையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் சுமார் 10,000 ஈராக்கிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் அதேவேளை, ஈராக்கில் கொரோனா  பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவுகளும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.