இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையமும், அதன் அங்கத்துவ நாடுகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜ.நா. பொதுச்செயலாளர், மனித உரிமை ஆணையாளர், உறுப்பு நாடுகள் மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஐந்து பேர் கையொப்பமிட்டு கோரிக்கை மனு அனுப்பி வைத்துள்ளனர்.
நீதிபதி K.P.சிவசுப்பிரமணியம், நீதிபதி A.K.ராஜன்,நீதிபதி அரிபரந்தாமன், நீதிபதி அக்பர் அலி நீதிபதி C.T.செல்வம் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகளும் கோரிக்கை மனுவில் கையொப்பமிட்டுள்ளனர்.
ஈழத்தமிழர்களின் நீதிகோரிய பயணத்தில் இந்திய உயர் நீதிமன்ற நீதிபதிகள் கைச்சாத்திட்டு இவ்வாறான மனு ஒன்றை அனுப்பிவைத்திருப்பது இதுவே வரலாற்றில் முதல் தடவையாகும்.
தமிழ் மக்களின் நீதிக்கான பயணத்தில் நீதிபதிகளின் இந்த நடவடிக்கை புதிய நம்பிக்கையினை தரும் என்று அனைத்துலக நீதிக்கான தளங்களில் பணியாற்றும் ஆளுமைகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த மனுவில் பின்வரும் 5 கோரிக்கைகள் உள்ளடங்கியள்ளன.
1. சிறீலங்கா அரசினை ஐ.நா பாதுகாப்புச் சபை ஊடாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
2. சிறீலங்கா அரசினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழத்தில் மீண்டும் பாரிய அழிவுகள் ஏற்படா வண்ணம் ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினை வழங்கவேண்டும்.
3. தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு குறித்தும், ஐ.நா மனித உரிமைகள் சபை அறிக்கைகளினை தயாரித்து பன்னாட்டு அரசியல் தளங்கள் மற்றும் பன்னாட்டு நீதிமன்றங்களில் கையளிக்க வேண்டும்.
4. ஐ.நா மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் பிரிவு 4 கீழ் இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளர் ஒருவரினை நியமிக்க வேண்டும்.
5. இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் சபையில் சிறப்பு கூட்டத்தொடர் ஒன்றினை நடாத்த வேண்டும்.