புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு துனிசிய கடற்பரப்பில் கவிழ்ந்ததில் 39 பேர் பலி

சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் தெற்கு துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸ் கடற்பரப்பில் செவ்வாய்க்கிழமை மூழ்கி விபத்துக்குள்ளானதில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடலோர காவல்படை 165 பேரை மீட்டது, மேலும் தப்பிப்பிழைத்தவர்களுக்கான தேடல்கள் ஸ்ஃபாக்ஸ் கடற்கரையில் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன என்று துனிசிய பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மொஹமட் ஜெக்ரி தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்த அனைத்து குடியேற்றவாசிகளும் சகாரா-கீழமை ஆபிரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.

துனிசிய துறைமுக நகரமான ஸ்பாக்ஸுக்கு அருகிலுள்ள கடற்கரைப்பகுதி ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் மோதல்கள் மற்றும் வறுமையிலிருந்து தப்பி ஐரோப்பாவில் சிறந்த வாழ்க்கையைத் தேடும் மக்களுக்கு ஒரு முக்கிய இடமாக மாறியுள்ளது.

துனிசிய குடியேறியவர்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டில் ஐந்து மடங்கு உயர்ந்து 13,000 ஆக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.