பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை! உட்துறை அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்த உத்தரவு

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு செய்யுமாறு உட்துறை அமைச்சர் ப்ரீதி பட்டேலிற்கு விசேட தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன அமைப்பான, தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேன்முறையீட்டுத் தீர்ப்பாயம் பிரித்தானியாவின் உட்துறை அமைச்சர் ப்ரீதி பட்டேலிற்கு இந்த உத்தரவை விடுத்துள்ளதாகவும் இதனால் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை நீக்கப்படலாம் எனவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

1978ஆம் ஆண்டு இலங்கையில் தோற்றம் பெற்ற இந்த பிரிவினைவாத அமைப்பு தற்கொலைக் குண்டுதாரிகளை உருவாக்கியது என சர்வதேச அளவில் கருதப்படுகின்றது.

இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை 2001இல் பிரித்தானியா தடை செய்தது. எனினும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்த தடைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தது.

விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், பிரித்தானியாவில் பயங்கரவாதம் குறித்து ஆய்வு செய்துவரும் கூட்டுப் பயங்கரவாத ஆய்வு நிலையம், விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாதத்தினை இன்னமும் கைவிடவில்லை என்பதால் தடை தொடரவேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீடிப்பதற்கான காரணங்களில் குறைபாடுகள் உள்ளதால் உட்துறை அமைச்சர் தடை குறித்து மீளாய்வு செய்யவேண்டுமென சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேன்முறையீட்டுத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

தடையை நீக்குவதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில், “நாங்கள் சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றோம். மேன்முறையீட்டாளரின் இறுதிப் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். அதுவரை விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாகவே விளங்கும்” என உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.