ஜெனீவா தீர்மானத்தின் ஒரு சில விடயங்களுக்கு உள்ளக பொறிமுறையின் கீழ் தீர்வு – சரத் வீரசேகர

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்களை சிறந்த முறையில் எதிர்கொள்வோம் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

30 வருட கால சிவில் யுத்தம்  இலங்கையின் சுதந்திரத்திற்காகவே முன்னெடுக்கப்பட்டது. விடுதலை புலிகளின் போராளிகள் குறித்து மாத்திரம் கவனம் கொள்ளும் மேற்குலகம் யுத்தத்தில் உயிரிழந்த 29 ஆயிரம் படைவீரர்கள் மற்றும்  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் விடுதலை புலிகளின் தாக்குதலினால் உயிரிழந்த அப்பாவி பொது மக்கள் குறித்து கவனம்  கொள்ளாதது கவலைக்குரியது.

எந்த நாடுகளையும் பகைத்துக் கொள்ளாமல் ஜெனிவா விவகாரத்தை அரசாங்கம் சிறந்த முறையில் கையாளும். தீரமானங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில விடயங்களை நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசியலமைப்பிற்கு உட்படுத்தி உள்ளக பொறிமுறை ஊடாக செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பு நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் அது தொடர்பில் வினவிய போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.