ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பயங்கரமானதொன்றாகும், இதன்படி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்குப் பொருளாதாரத் தடைகளை விதிக்கக்கூடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
ஜி.எல்.பி. பிளஸ் போன்ற சலுகைகள் இல்லாமல் போகலாம் என்பதுடன் படைப் பிரதானிகளுக்கு எதிரான வெளிநாட்டுப் பயணத்தடையும் நீடிக்கப்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேறுவதைத் தடுப்பதற்கான இராஜதந்திர நகர்வுகளைத் தற்போதைய அரசு உரிய வகையில் முன்னெடுக்கவில்லை.
இதனால் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு மட்டுமல்ல எதிர்காலத்தில் நாட்டு மக்களுக்கும் தான் தாக்கம் ஏற்படப் போகின்றது. எனவேதான் இதனைப் பாரதூரமானதொரு பிரச்சினையாக கருதுகின்றோம்.
நல்லாட்சி அரசால்தான் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என்றதொரு விம்பத்தை உருவாக்குவதற்கு தற்போதைய அரசு முயற்சிக்கின்றது.
ஆனால், உள்நாட்டு விவகாரத்தில் சர்வதேசம் தலையிடுவதற்கான களத்தை மஹிந்த ராஜபக்சவே அமைத்துக் கொடுத்தார்.
போர் முடிவடைந்த பின்னர் ஐ.நாவின் முன்னாள் செயலாளர் பான் கீ மூனுடன் இணைந்து கூட்டறிக்கை விடுத்தார்.
அதில் பொறுப்புக்கூறலுக்கு இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டது. இந்த பொறுப்புக்கூறல் தொடர்பில்தான் இன்று சர்வதேசம் கேள்வி எழுப்புகின்றது.
இலங்கை தொடர்பில் முதலாவது தீர்மானம் முன்வைக்கப்பட்டபோது அதில் இலங்கை வெற்றி பெற்றது.
13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டதால் ஆதரவு கிடைத்தது.
இதன்பிரகாரம்தான் நல்லிணக்க ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு ஆகியன அமைக்கப்பட்டன. ஆனால், உரிய வகையில் நடவடிக்கை இடம்பெறாததால்தான் பாரதூரமான தீர்மானங்கள் நிறைவேறின.
இந்நிலையில் நல்லாட்சி வந்த பிறகு சர்வதேச நெருக்கடி குறைந்தது. மின்சாரக்கதிரை உள்ளிட்ட சர்ச்சைகள் இருக்கவில்லை. வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகள் பலவீனமடைந்தனர்.
பொருளாதார இழப்புகள் ஏற்படவில்லை. ஆனாலும், எவருடனும் கலந்துரையாடாமல் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியமை தவறான செயலாகும்.
எது எப்படி இருந்தாலும் ஒற்றையாட்சி, இறையாண்மை, ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் படையினரை நாம் பாதுகாப்போம்.
இதில் பின்நிற்கப் போவதில்லை. ஜெனிவாப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இந்த அரசு முயற்சிக்கவில்லை. அதனை வைத்து உள்நாட்டில் பிரச்சாரம் செய்தது. வெளிநாடுகளுக்கு உறுதி மொழிகள் வழங்கப்பட்டன.
அவற்றை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேற்குலகத்துக்கு அடிபணியமாட்டோம் என சூளுரைக்கின்றனர்.
ஆனால், அமெரிக்காவின் கருணையால்தான் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானார் என்பதை மறந்துவிட முடியாது.
இந்தியா, ஜப்பான், தென்கொரியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை பெறமுடியாமல் போனமை தொடர்பில் இந்த அரசு பொறுப்புக்கூற வேண்டும்.
அதேவேளை, போருக்குப் பின்னர் மனித உரிமைகள், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
மாறாக மாற்று கருத்துகளை உடைய அரசியல்வாதிகள் வேட்டையாடப்பட்டனர். தற்போதுகூட எமது பிரஜா உரிமையைப் பறிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.
20ஆவது திருத்தச் சட்டம் மூலம் நீதிமன்றம் மற்றும் பொலிஸ் ஆகியவற்றின் சுயாதீனம் இல்லாமல் ஆக்கப்பட்டது.
இவ்வாறு உள்நாட்டில் ஜனநாயகம், மனித உரிமைகளுக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளதையே ஐ.நா. மனித உரிமைகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இங்கு ஜனநாயகக் கட்டமைப்பு உரிய வகையில் செயற்பட்டால் விமர்சனங்களை முன்வைக்கவேண்டிய தேவை சர்வதேசத்துக்கு எழாது.
அதேபோல தகுதியற்ற ஒருவரே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் ஒருவர் இருந்தாலும் அமைச்சின் செயலாளரே அமைச்சை வழிநடத்துகின்றார்.
இந்தியாவுக்கு இன்னும் தூதுவர் ஒருவர் நியமிக்கப்படவில்லை. முன்னர் தகுதியான, அனுபவம் வாய்ந்தவர்களே ஜெனிவா அனுப்பப்படுவர், தற்போது என்ன நடக்கின்றது?
குறிப்பாக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் பயங்கரமானதொன்றாகும்.
வருகின்ற செப்டெம்பர் மாதத்தில் இது வேறு வடிவில்கூட வரலாம். சர்வதேச விசாரணைக்கு வழிசமைக்கலாம்.
பொருளாதாரத்துக்கு மரண அடி கொடுக்கும் விதத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கான சந்தை வாய்ப்பை மூடலாம்.
ஜி.எல்.பி. பிளஸ் போன்ற சலுகைகள் இல்லாமல் போகலாம். படைப் பிரதானிகளுக்கான பயணத்தடை நீடிக்கப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.