16 வருட கால தேசிய சாதனையை முறியடித்த இளம் வீரர்

ஒலிம்பிக் வீரரான மஞ்சுள குமார வசமிருந்த 16 வருட கால தேசிய சாதனையை இளம் வீரரான உஷான் திவன்க முறியடித்தார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழக சம்பியன்ஷிப்பின் உயரம் பாய்தலில் 2.28 மீற்றர் பாய்ந்த உஷான் திவன்க தேசிய சாதனையை நிகழ்த்தினார்.

உயரம் பாய்தலில் ஒலிம்பிக், பொதுநலவாய விளையாட்டு விழா, ஆசிய விளையாட்டு விழா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் இலங்கைய பிரதிநிதித்துவப்படுத்தியிருந்துவந்த மஞ்சுள குமார, 2005 ஆம் ஆண்டு தென் கொரியாவின் இன்ச்சொய்னில் நடைபெற்ற ஆசிய வல்லவரின் ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 2.27 மீற்றர் பாய்ந்து தேசிய சாதனையை நிலைநாட்டியிருந்ததுடன், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தனது ஓய்வையும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் பழைய மாணவரான உஷான் திவன்க, அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியை மேற்கொண்டு வருகிறார்.

டெக்ஸாஸ் பல்கலைக்கழக சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற உஷான் திவன்க, உயரம் பாய்தலில் 2.28 மீற்றர் பாய்ந்து இலங்கை தேசிய சாதனையை நிலைநாட்டியதுடன் முதலிடத்தையும் பிடித்தார்.