தமிழீழ விடுதலைப்புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்களை பிரித்தானியா மூடிமறைக்க முயற்சித்ததாக ஸ்ரீலங்காவின் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வன்னிப்போர் தொடர்பில் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தயாரித்த இரகசிய அறிக்கையை ஐ.நா மனித உரிமைப் பேரவை ஆணையாளரினால் நியமிக்கப்பட்டுள்ள புதிய குழுவுக்கு பிரித்தானியா வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று காலை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிக்கின்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்காவின் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பிரித்தானியா மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
தமிழீழ விடுதலைப்புலிகளில் சிறுவர் போராளிகளை உருவாக்கியவர் தான் அடேல் பாலசிங்கம். இன்று சுதந்திரமாக பிரித்தானியாவில் வாழ்ந்து வருகின்றார். அவர் தான் பாடசாலை செல்கின்ற சிறுவர்களை வலுக்கட்டமாயமாக கடத்தி ஆயுதப் போராட்டத்தில் சேர்த்தவர்.
சிறுவர்கள் பலரை கொன்று இன்று சுதந்திரமாக உள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் போர்க் குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்பதற்கு அவரே சிறந்த சாட்சி. அதேபோல இறுதிப்போர் இடம்பெற்ற தருணத்தில் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் இருந்த என்டன கேஷ் என்பவர் அறிக்கை ஒன்றை தயாரித்து பொதுநலவாய நாடுகளுக்கு அனுப்பி வைத்திருந்தார்.
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கும் அவர் அறிக்கை செய்தார். அதில் ஸ்ரீலங்கா அரச படையினர் எந்த வகையிலும் போர்க் குற்றத்தில் ஈடுபட்டிருக்கவில்லை என்றே தெரிவித்திருந்தார். ஆனால் அந்த அறிக்கையை இன்று பிரித்தானியா மறைக்கின்றது.
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் நெய்ஷ்பி சுவாமி, அன்டன் கேஷின் அறிக்கையை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரியிருந்த போதிலும் 03 வருடங்களின் பின் முழுமையான அறிக்கை அவருக்கு வழங்கப்படவில்லை.
தாருஸ்மன் அறிக்கை கூட 2031 ஆம் ஆண்டு வரை பகிரங்கப்படுத்தப்படாது. இந்த நிலையில் தான் ஸ்ரீலங்காவின் மீள்நிகழாமை மற்றும் கணக்கு ஒப்புவித்தல் விவகாரம் குறித்து அறிக்கை செய்ய 12 பேரடங்கிய குழு ஒன்றை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் நியமித்திருக்கின்றது.
என்டன் கேஷின் அறிக்கையை பிரித்தானியா குறித்த 12 பேரடங்கிய குழுவுக்கு வழங்குமா என கேட்கின்றேன். அந்த வகையில் ஸ்ரீலங்கா படையினரை பாதுகாக்கவும் நாட்டைப் பாதுகாக்கவும் எதிரணி உட்பட அனைவரும் ஒரு தீர்மானமாகவே இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.