புற்றுநோயை ஏற்படுத்தும் பதார்த்தம் அடங்கிய தேங்காய் எண்ணெய் சந்தையில் விற்பனை செய்யப்படவில்லை. சேகரிக்கப்பட்ட 109 தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் ஊடாக சுகாதார தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல், அபிவிருத்தி மற்றும் பாவனையாளர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தினருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யில் புற்றுநோயை ஏற்படுத்தும் அப்லாடாக்சின் பதார்த்தம் கலக்கப்பட்டமை இருவேறுப்பட்ட விஞ்ஞான ஆய்வுகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டன. இந்த தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் சுங்க திணைக்களத்தினால் குறித்த நிறுவனத்தின் களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டன.
அப்லாடொக்சின் பதார்த்தம் கலக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக எதிர்தரப்பினர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். 25 மாவட்டங்களிலும் உள்ள பிரதான எண்ணெய் விநியோக மையங்களில் இருந்து 125 தேங்காய் எண்ணெய் மாதிரிகள்பெற்றுக் கொள்ளப்பட்டன.இவற்றில் 109 மாதிரிகளில் அப்லாடொக்சின் பதார்த்தம் கலக்கப்படவில்லை என்பது பரிசோதனை ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதன் அறிக்கை தேசிய நுகர்வோர் அதிகார சபைக்கும், தெங்கு உற்பத்தி அதிகார சபைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே பொது மக்கள் தேங்காய் எண்ணெயை அச்சமின்றி கொள்வனவு செய்யலாம்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையை 800 ரூபாவால் அதிகரிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கோழி இறைச்சியின் விற்பனை விலை குறித்து 2020 ஆம் ஆண்டு விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. சோளம் உற்பத்தியின் வீழ்ச்சியினால் சோளத்தின் விலை அதிகரிக்கப்பட்டது. இதனால் கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் உற்பத்தி மட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 430 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும். என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது. கோழி இறைச்சி பிரதான நிலை உற்பத்தியாளர்கள் விற்பனை இடைத்தரகர்களுக்கு 375 ரூபாவிற்கு கோழி இறைச்சியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளார்கள். ஆகவே கோழி இறைச்சியின் விற்பனை விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.
27 அத்தியாவசிய உணவு பொருட்களின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலைக்கு மேலதிகமாக அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தொடர்பில் பொதுமக்கள் நுகர்வோர் அதிகார சபைக்கு முறையிடலாம் என்றார்.