இலங்கையில் கொவிட் – 19 தடுப்பூசி வழங்கப்படும் இடங்கள் மற்றும் திகதி போன்ற விடயங்கள் உரியவாறு அனைத்து தரப்பினரையும் சென்றடையவில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, எவ்வித பாகுபாடுகளுமின்றி அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொள்வதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.
இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
தெற்காசியப்பிராந்தியத்தில் உள்ள வசதிகள் குறைவான நாடுகள் கொவிட் – 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் தடைகளை எதிர்நோக்காமலிருப்பதை அந்நாடுகளின் அரசாங்கங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
அதுமாத்திரமன்றி பிராந்திய ரீதியில் ஏற்பட்டிருக்கும் தடுப்பூசிக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு, அதன் உற்பத்தியை தேசிய ரீதியானதாக மாற்றவேண்டும் என்றும் சர்வதேச சமூகத்தை வலியுறுத்துகின்றோம்.
அண்மைக்காலத்தில் தெற்காசியப்பிராந்திய நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் தலித் சமூகத்தினர், சிறுபான்மை இனத்தவர்கள், கூலித்தொழிலாளர்கள், சுத்திகரிப்புப் பணியாளர்கள், தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள், பின்தங்கிய பிரதேசங்களில் வாழ்வோர், சிறைக்கைதிகள், தத்தமது நாடுகளுக்குள்ளேயே இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்டோருக்கு பெரும்பாலும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையேற்பட்டுள்ளது.
அதற்கு தடுப்பூசி வழங்கலில் பற்றாக்குறை மற்றும் இதுகுறித்த போதிய விழிப்புணர்வின்மை ஆகியவை பிரதான காரணங்களாக அமைந்துள்ளன. அதேவேளை பல்வேறு நாடுகளினது தடுப்பூசி வழங்கல் பிரசாரங்களிலும் குறிப்பாக அகதிகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் போன்றோர் விலக்கப்பட்டுள்ளனர்.
கொவிட் – 19 தடுப்பூசிக்கான பற்றாக்குறையின் காரணமாக தெற்காசியப்பிராந்தியத்தில் உள்ள அநேகமான நாடுகள் தமது சனத்தொகையில் 6 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு முதலாம் கட்டத் தடுப்பூசியைக்கூட வழங்கமுடியாத நிலையிலுள்ளன.
இந்நிலையில் மருந்துப்பொருட்கள் போன்றவற்றுக்கான காப்புரிமையை நீக்குமாறு சர்வதேச நாடுகளைக் கோருகின்றோம். மேலும் இன, மத ரீதியான வேறுபாடுகள், சமூக – பொருளாதார தகுதிகள் போன்ற எவ்விதமான பாகுபாடுகளுமின்றி அனைவரும் கொவிட் – 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையை தெற்காசியப்பிராந்திய நாடுகளின் அரசாங்கங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
இலங்கையைப் பொறுத்தமட்டில் கொவிட் – 19 தடுப்பூசி வழங்கப்படும் இடங்கள் மற்றும் திகதி உள்ளிட்ட சரியான தகவல்கள் மக்களை சென்றடைவதில் பல்வேறு தடைகள் காணப்படுகின்றன.
அதேபோன்று தடுப்பூசி வழங்கல் திட்டம் மற்றும் பரந்த எண்ணிக்கையிலான மக்களுக்குத் நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற நாடுகள் போதிய தகவல்களைக் கொண்டிராத நிலை காணப்படுகின்றது.
எனவே கொவிட் – 19 தடுப்பூசி வழங்கல் திட்டம் தொடர்பான தகவல்கள் அனைத்து சமூகங்களுக்கிடையிலும் அவர்களுக்குப் புரியக்கூடிய மொழி அல்லது வடிவில் பரிமாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியமாகும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.