இணையத்தளங்களில் பொய் பிரசாரங்களை நிறுத்த சட்டம் கொண்டு வரப்படும் – நீதியமைச்சர்

பேச்சு உரிமையைப் பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் ,அந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி எதனையும் செய்யும் வரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கத் தயாரில்லை எனவும் நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

பேச்சு சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்த எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை.அரசாங்கத்திற்கு எதிராகவும், அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிராகவும் திட்டமிட்ட சிலர், சமூக ஊடகங்கள், இணையத்தளங்களைப் பயன்படுத்தி பல்வேறு பொய் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் மூலம் மக்களைத் தவறாக வழிநடத்துகின்றனர். இப்படியான நபர்களை அடையாளம் கண்டு, அவர்களின்  நடவடிக்கைகளை நிறுத்துவதற்குத் தேவையான சட்டத்திருத்தங்களைக் கொண்டு வரத் தீர்மானித்துள்ளோம்.

இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் அமுலில் இருக்கும் இப்படியான சட்டங்களை ஆராய்ந்து, இலங்கைக்குப் பொருத்தமான சட்டத்தை உருவாக்கி அமைச்சரவையில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் நீதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.