2 ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி மே முதல் வாரத்தில் ஆரம்பம்

அஸ்ட்ராசெனிகா கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை மே மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தலைமையில் கொவிட் தடுப்பூசி தொடர்பான விசேட நிபுணர்கள் குழு மற்றும் தொற்று நோயியல் பிரிவு உள்ளிட்டவற்றின் பங்குபற்றலுடன் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் வினவிய போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

முதற்கட்டமாக அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களுக்கு நேற்று திங்கட்கிழமை முதல் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் இது தொடர்பில் மீள் பரிசீலனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டதையடுத்து நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதனையடுத்தே அடுத்த மாதம் முதல் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது.

மே மாதம் முதல் வாரத்திலிருந்து அடுத்த 3 வாரங்களுக்கு வழங்குவதற்குத் தேவையான அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. எனவே அடுத்த மாத இறுதியில் எஞ்சிய தொகை தடுப்பூசிகளை இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.