உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமிறக்கப்பட்டு உப பிரதேச செயலகமாக அறிவிக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாதென தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் இப்பிரதேசத்தில் வாழ்கின்ற காரணத்தினாலா இவ்வாறு பாகுபாடு பார்க்கப்படுகின்றது எனவும் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விளையாட்டுத்துறை அமைச்சின் ஊக்கமருந்து தடை தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை உப பிரதேச செயலகமாக தரமிறக்குமாறு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அம்பாறை மாவட்ட அரச அதிபருக்கு ஏப்ரல் 8 ஆம் திகதியிடப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 28 வருடங்களாக கல்முனை தமிழ் பிரதேச செயலகமாக இது செயற்பட்டு வருகின்றது.
இங்கு 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள் . இவர்களில் 3,000 வரையிலான முஸ்லிம்களும் 104 சிங்களவர்களும் உள்ளனர். வாக்காளர்களாக 22,500 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
பிறப்பு,இறப்பு,விவாகப்பதிவாளர் அலுவலகம், காணி அலுவலகம் என்பவற்றினால் இது ஒரு தனி பிரதேச செயலகமாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கென தனியாக நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்படுகின்றன. வர்த்தமானியில் பிரசுரிக்கப்படாத பல பிரதேச செயலகங்கள் உள்ளன.
மட்டக்களப்பு, வவவுனியாப்பகுதிகளில் இவை உள்ளன. இவ்வாறான நிலையில் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் மட்டும் ஏன் பாரபட்சம் காட்டுகின்றீர்கள்?தமிழ் மக்களை உள்ளடக்கிய பிரதேச செயலகமாக இருப்பதுதான் காரணமா?
கல்முனை தமிழ் பிரதேச செயலகம் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் தரமிறக்கப்பட்ட விடயத்தை அவசர நிலையாக கருதி இதனை மீள் பரிசீலனை செய்யுமாறு கோருகின்றேன். இவ்விடயம் தனியாக கையாளப்பட வேண்டும்.
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தனி பிரதேச செயலகமாக செயற்பட ணனுமதிக்க வேண்டும் . இவ்விடயம் தொடர்பில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரின் கவனத்துக் கொண்டு செல்லுமாறு இங்குள்ள அரச தரப்பினரைக் கோருகின்றேன்.
உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமிறக்கப்ப ட்டு உப பிரதேச செயலகமாக அறிவிக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது.இது பாரபட்சமான செயற்பாடு என்பதுடன் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவும் உள்ளது என்றார்.