4.58 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட இளைஞனுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மகரகமை பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான இளைஞனுக்கு இந்த ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதி பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் மகரகமை பிரதேசத்தில் மேற்கொண்டு சுற்றிவளைப்பு தேடுதலில் இந்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து போதைப் பொருளை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டில் சட்டமா அதிபர், சந்தேக நபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர், தீர்ப்பை வழங்கிய நீதிபதி, குற்றவாளிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதாகவும் நீதிபதி கூறியுள்ளார்.