திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு 2 வாரங்கள் தடை

தமிழர்களின் வரலாறுகளைச் சிங்கள வரலாறுகளாக மாற்றுவதில் கடும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறுதான், இராவணனையும் இராவணவலவேகய எனும் சிங்கள அரசனாகக் காண்பிக்க முயற்சிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையில் சித்திரப் பாடத்தினை எடுத்தால் பல சொற்கள் சிங்களத்தில்தான் சொல்லப்படுகின்றது. சித்திரப் பாடத்தில் இருக்கின்ற தமிழ் வரலாறுகள் அழிக்கப்படுகின்றன.

காசியப்பனின் காலம், சிகிரியாவின் மலைகூட சிவபெருமானையும், உமாதேவியாரையும் குறிப்பிடுகின்ற சிற்பங்கள் எல்லாம் இன்று சிங்கள முனிவர்களிற்குரியதாக அல்லது சிங்கள கலைஞர்களுக்குரியதாக மாற்றிவிட்டார்கள்.

எந்தவொரு சித்திர நூலைத்திறந்தாலும் அங்கு சிங்கள கலைதான் காணப்படுகின்றது. இலங்கையில் தமிழர்களுக்கு இருந்த கலைகளும், தமிழர்களுக்கான சந்தர்ப்பங்களும் இல்லாமலே போய்விட்டன.

நாங்கள் மூன்றாம் வகுப்பு படிக்கின்ற போது பண்டார வன்னியன், சங்கிலியன் பற்றி படங்கள் ஊடாகப் படித்தோம். பண்டார வன்னியனின் நினைவுக் கல்லை புத்தகத்தின் ஊடாகப் பார்த்திருக்கிறோம்.

அதேபோல், சங்கிலிய மன்னனின் சிலையோடு படங்கள் ஊடாகப் பாடத்தில் படித்திருக்கின்றோம். சமயப் புத்தகங்களில் கூட படித்தோம். இன்று பண்டார வன்னியனை பிள்ளைகள் படிப்பதில்லை.

சங்கிலிய மன்னனை மறைத்துவிட்டார்கள். நாங்களே எங்கள் வரலாறுகளைத் தேடிக்கொண்டிருக்கின்றோம். ஆனால், எங்கள் வரலாறுகளைச் சிங்கள வரலாறுகளாக மாற்றுவதில் சிங்களம் தன்னுடைய பெரிய தலயாய வேலையைச் செய்துகொண்டிருக்கின்றது.

இராவணனைக்கூட ஒரு சிங்கள அரசனாக இராவணவலவேகய என்ற சிங்கள பெயரோடு நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றார்கள். நாங்களும் எங்களுக்குள் இருக்கின்ற பயங்களின் அடிப்படையில் விட்டுவிடுகின்றோம்.

ஒருகாலத்திலே ராஜராஜசோழன், இராஜேந்திர சோழன் அல்லது கரிகாலன், சேர, சோழ மன்னர்கள் எல்லாம் தங்களுடைய கொடிகளிலே புலிகளையும், மீன்களையும் பறக்கவிட்ட காலங்களை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

பிற்பட்ட காலத்திலே நாங்கள் கொண்டிருந்தாலும்கூட சொல்லமுடியாத மனிதர்களாக நாங்கள் வாழ்கின்றோம். இன்றும்கூட வரலாற்றுப் புத்தகங்களை எடுத்துப்பார்த்தால் இலங்கையில் தரம் ஆறு முதல் 11 வரை வரும் வரலாற்றில்கூட தமிழர்களின் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டிருக்கின்றது.

அந்த வரலாறுகள் இல்லாமலே செய்யப்பட்டிருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த மண்ணிலே இருந்தபோது கல்விக் கழகத்தின் ஊடாக தமிழின வரலாறு என்கின்ற ஒரு செய்தி எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லப்பட்டது.

அதேபோலதான், இந்த சித்திரப் புத்தகத்தை நான் பார்த்தபொழுது கேட்கப்படுகின்ற ஒவ்வொரு கேள்விகளும் சிங்களப் பெயர்களாகவே சொல்லவேண்டிய நிலை தமிழ் பிள்ளைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆனாலும், இன்றுள்ள ஆசிரியர்கள், கலைஞர்கள் ஊடாக இன்றும் எங்கள் பிள்ளைகள் மத்தியில் இவற்றை நாங்கள் கொண்டு செல்கின்றோம். ஆகவே, எங்களுடைய கலைகளையும், வரலாறுகளையும் காப்பாற்றவேண்டிய கடமை கல்விமான்களையும் கல்வியலாளர்களையும் சார்ந்தது. நாங்கள் ஒடுங்கிஒடுங்கிப் பயந்து தலைகுனிந்து வாழ்ந்தோம். வாழ்கின்றோம்.

இதனால், இன்னுமின்னும் எங்களுடைய வரலாற்றைத் தொலைத்துக்கொண்டே போகின்றோம். எங்களுடைய வரலாறு எங்களிடமிருந்து தள்ளிப்போகின்றது. இன்னும் 10 ஆண்டுகள் போனால் எங்கள் சந்ததிக்குச் சொல்வதற்கு வேறு செய்திகளைத்தான் சொல்ல வேண்டியேற்படும்.

வரலாறுகள் எல்லாம் மாற்றி எழுதப்படும். குறிப்பாக வெடுக்குநாறி மலையிலே தமிழ் கல்வெட்டுக்களை வாசிப்பதற்கு சிங்கள அரசு தயாராக இல்லை. குருந்தூர் மலையிலே கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை ஒரு தூணாகவே சித்தரித்து மாற்ற முனைகின்றார்கள்.

உருத்திரபுரத்திலே நான்காயிரம் ஆண்டுகள் கடந்துள்ள சிவாலய வளாகத்திலே சிங்கள பௌத்த அடையாளங்களைக் காண்பிக்க முயற்சிக்கின்றார்கள். கந்தரோடையில் இருக்கின்ற அடையாளங்களைத் தோண்டினால் தமிழ் பௌத்த அடையாளங்கள்தான் வரும் என்பதற்காக தோண்டாமலே விட்டிருக்கின்றார்கள்.

ஆய்வே செய்யப் பயப்படுகின்றார்கள். ஆகவே, நாங்கள் தமிழ் பௌத்தர்களாகவும் இந்த மண்ணிலே வாழ்ந்திருக்கின்றோம். தமிழை நேசித்த மனிதர்களாக இருந்திருக்கின்றோம். தமிழ் பிராமிய எழுத்துக்கள்தான் இங்கு இருந்திருக்கின்றன. வரலாறு எங்களுக்கு முன்னாலே பல்வேறுபட்டவர்களைத் தந்திருக்கின்றது. நாங்கள் பல வரலாற்று அடையாளங்களைக் கண்டவர்கள்.

நாகர், இயக்கர் என்ற இனம்தான் இலங்கையில் முதன்முதலில் இருந்ததாக வரலாறு சொல்கின்றது. அதிலும், இயக்கர்களுக்கான வரலாறு கொஞ்சம் தள்ளிப்போனாலும், நாகர்கள் எனும் வரலாற்றில் பல்வேறுபட்ட விடயங்களை நாங்கள் பார்க்கின்றோம்.

நாங்கள் வாழும் பிரதேசத்தில்கூட பூநகரியில் நாகதேவன்துறை, இந்தியாவில் நாகப்பட்டினம், நாகலாந்து போன்ற இடங்கள் எல்லம் எங்களுடைய இனங்கள் வாழ்ந்த இடங்களாகவே சொல்லப்படுகின்றன.

புளியம்பொக்கனை நாகதம்பிரான், பதூர் நாகதம்பிரான் என அண்மையில்கூட பொலன்னவையிலே 108 ஈமத்தாலிகளை எடுத்திருக்கின்றார்கள். நாகர் காலத்திலே புதைக்கப்பட்ட ஈமதாலிகள் அவை. அந்த ஈமதாலிகளை நாகபாம்புகளே பாதுகாத்ததாக காண்பித்திருக்கின்றார்கள். நாகருடைய ஏழாயிரம் ஆண்டுகளிற்குரிய ஈமதாலிகள் என்றுதான் வரலாறு சொல்கின்றது.

அது உண்மையிலே வெளியே வருமாக இருந்தால் இங்கு தமிழர்கள் எவ்வாறு வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதற்கு அதுவொரு அடையாளமாக இருக்கும்.

ஆகவே, இந்த வரலாறுகளையு்ம, அடையாளங்களையும் தொலைத்து இந்த மண்ணிலே நாங்கள் நிர்க்கதியாக வாழ்கின்ற இந்தக்காலத்திலே வரலாறுகளை சொல்லிக்கொடுக்க அனைவரும் முன்வரவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.