பிரித்தானியாவின் அவசர கட்டுப்பாடுகளினால்!மீள திரும்பும் ரோயல் கடற்படை கப்பல்கள்

பிரான்சுடன் மீன்பிடி தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு மத்தியில் ஜெர்சியில் ‘நிலைமையைக் கண்காணிக்க’ அனுப்பப்பட்ட ரோயல் கடற்படைக் கப்பல்கள் துறைமுகத்திற்கு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Channel தீவுகள் பகுதியில் மீன் பிடிக்க உரிமம் வழங்குவது தொடர்பாக பிரித்தானியா புதிய தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கடந்த வெள்ளியன்று, படகுகளை கண்காணிக்கும் தொழில்நுட்பம் கொண்ட 41 மீன் பிடி படகுகளுக்கு Jersey தீவு பகுதியில் மீன் பிடிக்க பிரித்தானியா அங்கீகாரம் அளித்தது. அத்துடன், புதிதாக சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

ஆனால், அவை குறித்து பிரான்சுடன் பிரித்தானியா கலந்தாலோசிக்கவில்லை என்றும், அவை குறித்து தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் பிரான்ஸ் மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

பிரித்தானியா விதித்துள்ள அந்த புதிய கட்டுப்பாடுகள், எங்கெல்லாம் பிரான்ஸ் மீன் பிடிப் படகுகள் செல்லலாம், எங்கு செல்லக்கூடாது, கடலில் எத்தனை நாட்கள் மீனவர்கள் மீன் பிடிக்கலாம், அவர்கள் படகுகளில் என்னென்ன இயந்திரங்கள் வைத்திருக்கலாம் என்பது குறித்தெல்லாம் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய கடல் பகுதியில் மீன் பிடிக்க தங்கள் படகுகள் சிலவற்றிற்கே உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி, பிரெஞ்சு மீனவர்கள் சென்ற மாதம் போராட்டம் ஒன்றைத் துவக்கினார்கள்.

அதன்படி, பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு மீன்களைக் கொண்டுவரும் ட்ரக்குகள் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையில் மீன் பிடி தொடர்பில் ஏற்பட்ட பிரச்சனைக்கு இரு நாடுகளும் போர்கப்பல்களை அனுப்பியிருந்தன.

இதற்கிடையில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்சி தீவின் முதலமைச்சர் Senator John Le Fondre உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரித்தானிய பிரதமர் அலுவகத்தின் செய்தித்தொடர்பாளர் கருத்து வெளியிடுகையில், மீன் பிடிப்பது தொடர்பில் ஜெர்சி தீவு மற்றும் பிரான்ஸ் நாட்டிற்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று கூறினார்.

இதேவேளை, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு ஏற்பட்ட மீன்பிடி பிரச்சினைகளை, எதிர்த்து போராடும் விதமாக சுமார் 60 மீன்பிடி படகுகளை பிரான்ஸ் ஜெர்சி தீவிற்கு அனுப்பியிருக்கிறது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரித்தானியா ஏற்கனவே 2 போர்கப்பல்களை கண்காணிப்பதற்காக ஜெர்சி தீவிற்கு அனுப்பியிருந்தது.

இந்நிலையில் பிரான்சும் 2 போர்க் கப்பல்களை அனுப்பியதால் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில், ஜெர்சியில் ‘நிலைமையைக் கண்காணிக்க’ அனுப்பப்பட்ட ரோயல் கடற்படைக் கப்பல்கள் துறைமுகத்திற்கு திரும்புவதை டவுனிங் வீதி உறுதிப்படுத்தியுள்ளது.