பொலிஸாருக்கு பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!

முக்கவசங்கள் இன்றி பொது இடங்களில் ஒன்றுகூடும் நபர்களை திடீர் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்து பொலிஸ் வாகனங்களில் கொண்டுசெல்வதை நிறுத்துமாறு பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் விசேட சுற்றறிக்கையின் ஊடாக அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு முகக்கவசங்கள் அணியாதவர்களை கைது செய்து கொண்டு செல்லும் போது, அதனூடாக பொலிஸ் அதிகாரிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கைது செய்யப்படும் ஒரு பிரிவினரை மற்றுமொரு இடத்தில் கைது செய்யப்படுவோருடன் சேர்த்து ஒரே வாகனத்தில் கொண்டு செல்வதன் காரணமாகவும் இவ்வாறு வைரஸ் பரவும் ஆபத்து இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் காலங்களில் பொது இடங்களில் முகக்கவசங்கள் இன்றி ஒன்றுகூடுபவர்களை கைது செய்யும் போது, பாதுகாப்பான முறையிலும் தனியான வாகனங்களின் ஊடாகவும் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.