இலங்கைக்கு வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை  இரத்து செய்வது தொடர்பாக மீளாய்வு செய்வதற்கான  தீர்மானம் ஒன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனடிப்படையில் எதிர்வரும் நாட்களில் ஜி.எஸ்.பி.பிளஸ்  வரிச் சலுகை குறித்து இலங்கைக்கு நெருக்கடி நிலைமை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

705பேர் கொண்ட ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 628 பேர் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இலங்கையின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும் என்பது பொருளாதார வல்லுணர்களின் கணிப்பாகும்.

 

இதனடிப்படையில் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கையின் உறுதிப்பாடுகள் செயற்படுத்தப்படாமை, மனித உரிமைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் மற்றும்  அரசியல், சிவில் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பிரயோகிக்கப்படல் போன்ற பிரதான விடயங்களின் அடிப்படையிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி வரி சலுகையினால் கூடிய பயன் பெறும் நாடுகளில் இலங்கை முன்னிலையில் உள்ளது. 2020 ஆம் ஆண்டில் 22.4 வீத ஏற்றுமதி ஐரோப்பிய ஒன்றியத்திற்கானதாகும். இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான ஏற்றுமதி பொருளாதார இடைவெளி இலங்கைக்கு சாதமாகவே உள்ளது. இதே போன்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கையின் ஏற்றுமதிகளில் மிக பெரிய சந்தை வாய்ப்பை கொண்டிருந்த ஆடை ஏற்றுமதியை இன்று பங்களாதேஷ் ஆக்கிரமித்துள்ளது.

இலங்கையை பொறுத்த வரையில் ஐரோப்பிய ஏற்றுமதி சந்தை மிகவும் சாதகமான தன்மையையே பெற்றுக்கொடுத்துள்ளது. ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை மீண்டும் இழப்பது என்பது அது இலங்கையின் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும்.