நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய எடுத்த தீர்மானம் இரத்து

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களுக்காக ஆடம்பர வாகனங்களை இறக்குமதி செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை முற்றாக இரத்துச் செய்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கடன் கடிதங்களை வழங்கிய வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் வாகனங்கள் இறக்குமதி செய்வதை முற்றாக இரத்துச் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கண்டியில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களுக்காக 227 ஆடம்பர வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

வாகனங்களை இறக்குமதி செய்ய தடைவிதித்துள்ள நிலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டிருந்தன.

அந்நிய செலாவணியை கையிருப்பில் வைத்துக்கொள்ள அரசாங்கம் வாகனம் மற்றும் மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய தடைவிதித்தது.