நாட்டில் தீவிரமாக பரவிச்செல்லும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் எதுவும் இல்லை. அதேபோன்று இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைவது பயங்கரமான நிலையாகும். இதற்கு எதிர்க்கட்சியும் மாற்று வழியொன்றை இதுவரை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவில்லை. அதனால் இது தொடர்பில் குரல்கொடுக்க வேண்டும் என உணர்ந்தே பாராளுமன்றத்துக்கு செல்வதற்கு தீர்மானித்திருக்கின்றேன் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
பாராளுமன்றம் செல்வதற்கு நான் எதிர்பார்த்திருக்கவில்லை. என்றாலும் இதுதொடர்பில், பாரிய அழுத்தம் வந்தது. விசேடமாக இரண்டு விடயங்களை பிரதானமாகக்கொண்டே இந்த தீர்மானத்துக்கு வந்தேன். முதலாவதாக கொவிட்டை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. நாங்கள் நினைத்ததை விடவும் மரணங்கள் பாரியளவில் அதிகரித்திருக்கின்றன. இந்த நிலைமையில் இதுதொடர்பாக குரல் கொடுக்கவேண்டும் என உணர்ந்தேன்.
அடுத்ததாக அரசியல் நிலைமையை பார்க்கும்பாது, அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைவது மிகவும் கஷ்டமான நிலையாகும். இதற்கு மாற்றுவழி ஒன்றை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியும் இதுவரை முன்வைக்கவில்லை. இது மிகவும் பயங்கரமான சந்தர்ப்பமாகும். இவ்வாறான அரசியல் நிலைமையை நான் ஒருபோதும் கண்டதில்லை. தற்போதைய நிலைமையில் நாடும் பிரச்சினைக்குள்ளாகி இருக்கின்றது. அரசியலும் பிரச்சினைக்குள்ளாகி இருக்கின்றது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என என்னாலும் உணர்ந்துகொள்ள முடியாத நிலையே இருக்கின்றது.
அதனால் சிலவேளை, நான் பாராளுமன்றம் சென்ற பின்னர் தற்போது செல்லும் போக்கை சரி செய்துகொள்ள முடியுமாக இருக்கும் என நம்புகின்றேன். இந்த விடயங்களே நான் பாராளுமன்றத்துக்கு செல்ல எடுத்த தீர்மானத்தின் பிரதான காரணிகளாகும். அதனால் கொவிட்டை கட்டுப்படுத்த என்னால் முடிந்த ஆலோசனைகளை தெரிவிப்பதற்கு முயற்சிப்பேன். அதேபோன்று பொருளாதார ரீதியிலும் நாடு பாரியளவில் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. அதனால் அனைத்தையும் புதிதாக சிந்தித்து, ஒரு அமைப்பாக ஒன்றிணைந்து செயற்பட்டாலே இந்த பிரச்சினையில் இருந்து விடுபடலாம் என நினைக்கின்றேன் என்றார்.