மக்களின் வரிப்பணத்தில் கொள்வனவு செய்யப்படும் வாகனங்களை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்காது – சஜித்

வரி செலுத்துபவர்களின் நிதியிலிருந்து  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரிப்பதாக தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , அதற்கு செலவிடும் நிதியை நாட்டு மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்திற்கு பயன்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

வரி செலுத்துபவர்களின் நிதியிலிருந்து  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாங்கள் நிராகரிக்கின்றோம்.

நாட்டில் நிலவுகின்ற  இந்த மட்டுப்படுத்தப்பட்ட நிதியத்தை அனைத்து இலங்கையர்களுக்கும் தடுப்பூசிகளை வழங்குவதற்காக பயன்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அரசியல்வாதிகளின் வாழ்வை செழிப்பாக்குவதற்கு மக்களுக்குரிய வளத்தை பயன்படுத்துவதற்கு  ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் அனுமதிக்காது. இதற்குப் பதிலாக அவ்வாறான வளங்களை நாட்டின் மேம்பாட்டுக்கும், அபிவிருத்திக்கும், சுபீட்சத்துக்கும் முதலீடு செய்தல் வேண்டும்.