பருத்தித்துறையில் 23 பேருக்கு கொரோனா: தொற்றாளர்கள் வசிக்கும் கிராமம் தனிமைப்படுத்தலில்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேசத்தில் 60 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 23 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த தொற்றாளர்கள் வசிக்கும் கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறையின்  J/401 கிராம அலுவலர் பிரிவில் நேற்று 60 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் குறித்த கிராம அலுவலர் பிரிவினை தனிமைப்படுத்துமாறு சுகாதாரத் தரப்பினர் மாவட்டச் செயலருக்கு பரிந்துரைத்துள்ளனர். பருத்தித்துறை நகரத்தை அண்டிய பகுதியான 2 ஆம் குறுக்கு வீதியில் உள்ள குறித்த பகுதியிலேயே இவ்வாறு 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஒருவர் அண்மையில் ஆவரங்கால் பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் உயிரிழந்திருந்தார். அவரது சகோதரனுக்கு காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்தே, குறித்த குடியிருப்பு பகுதிவாசிகளுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.