15 வயது சிறுமி விற்பனை விவகாரம் ; பொலிஸ் அதிகாரியும் வங்கி முகாமையாளரும் கைது

கல்கிஸை பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைக்காக இணையத்தில் விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒரு பொலிஸ் அதிகாரியும், வங்கியொன்றின் முன்னாள் முகாமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தினால் இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட விசாரணையிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந் நிலையில் கைதான நபர்களை இன்று கொழும்பு தலைமை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 7 ஆம் திகதி கல்கிசை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவல் பிரகாரம் 15 வயதான சிறுமியை இணையத்தில் விற்பனை செய்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்தே இந்த விவகார விசாரணைகள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உத்தரவில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் இதுவரை 40 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் பலரை கைதுசெய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.