அமைதி ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் – ஐ.நா!

இலங்கையில் அமைதி ஆர்ப்பாட்டங்களை நடத்தும் பொதுமக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இந்த உரிமை கொரோனாக் கட்டுப்பாட்டு சட்டங்களால் மீறப்படக் கூடாது.” – இவ்வாறு இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளார் இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர்.

அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் செய்தியில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அப்பால் செல்லக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் கொரோனாவைக் காரணம் காட்டி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடல்கள் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளன.

குறித்த தடைகளைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில், கருத்து வெளியிடும் சுதந்திரம் மற்றும் ஏனைய உரிமைகள் கொரோனாக் கட்டுப்பாட்டு சட்டங்களால் மீறப்படக் கூடாது என்று ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.