வடக்கு பிரதம செயலாளராக தெய்வேந்திரன் தெரிவானார்!!

நீண்ட இழுபறியின் பின்னர் வடக்கு மாகாணசபையின் பிரதம செயலாளராக க.தெய்வேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை அவர் பதவி ஏற்பார் என்றும் வடக்கு மாகாண உயர்பீடத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

வடக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் அ.பத்திநாதன் ஓய்வு பெற்ற நிலையில் அவருடைய பதவிக்காக ஐவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

தேசிய நீர்வழங்க வடிகாலமைப்பின் சிரேஸ்ட மேலதிக செயலாளர் க.தெய்வேந்திரன், வடக்கு மாகாண ஆளுநரின் முன்னாள் செயலாளரும் கல்வி அமைச்சின் செயலாளருமான இளங்கோவன், முன்னாள் பிரதம செயலாளர் விஜயலட்சுமி, அ.பத்திநாதன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

வடக்கின் நிர்வாக உயர்பீட அதிகாரி ஒருவர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இருவர் குறித்த பரிந்துரைகளை முன்வைத்திருந்த நிலையில், பரிந்துரைக்கப்பட்டவர்களை வியத்கம அமைப்பு பரிசீலனைக்கு உட்படுத்தியிருக்கின்றது.

இதன் போது கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரின் பெயர் குறித்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட அதேவேளை, அ.பத்திநாதனும் பரிசீலனைப்பட்டியலுக்கு உள்ளீர்க்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில் 95 புள்ளிகளைப் பெற்ற க.தெய்வேந்திரன் புதிய பிரதம செயலாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அடுத்த நிலையில் இருந்தவர்களுக்கு முறையே 47, 42 புள்ளிகள் கிடைக்கப்பெற்றால் மீள் பரிசீலனையின்றி பிரதம செயலாளராக தெய்வேந்திரன் தெரிவாகியிருக்கின்றார். அவர் எதிர்வரும் திங்கட்கிழமை பதவி ஏற்பார் என்று தெரியவந்துள்ளது.

தேசிய நீர்வழங்க வடிகாலமைப்பின் சிரேஷ்ட மேலதிக செயலாளராக தற்போது செயற்படும் தெய்வேந்திரன் வடக்கு மாகாண சபையின் பேரவைச் செயலாளர், நிக்கொட் திட்டப்பணிப்பாளர் என்ற பல உயர் பதவிகளை வகித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.