எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் இடைக்கால நஷ்டஈட்டு தொகையை கடற்றொழிலாளர்களுக்கு வழங்க தீர்மானம்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் உரிமையாளர்களிடமிருந்து இடைக்கால நஷ்டஈடாக 720 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் 620 மில்லியன் ரூபாவை கடற்றொழில் பாதிக்கப்பட்டிருக்கும் மீனவர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றியதால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மற்றும் எதிர்காலத்தில் இதுதொடர்பான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பது தொடர்பாக ஆராயும் குழுவின் கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை நீதி அமைச்சில் இடம்பெற்றது. கலந்துரையாடலைத்தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் உரிமையாளர்களிடம் நாங்கள் கோர இருக்கும் நஷ்டஈட்டு தொகையை கட்டம் கட்டமாகவே கிடைக்கப்பெறும். அதன் முற்கட்ட இடைக்கால நஷ்டஈடாக 720 மில்லியன் ரூபா மத்திய வங்கிக்கு அனுப்பப்பட்டிருக்கின்றது. இதில் பெரும் தொகையை பாதிக்கப்பட்டிருக்கும் மீனவர்களுக்கு வழங்கவேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவித்திருந்தனர். அதன் பிரகாரம் கிடைக்கப்பெற்ற  720 மில்லியன் ரூபாவில்   620 மில்லியன் ரூபாவை பாதிக்கப்பட்டிருக்கும் மீனவ சமூகத்துக்கு வழங்க இருக்கின்றோம்.

கப்பல் தீப்பற்றியதால் குறிப்பாக கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சில பிரதேசங்களில் கடற்றொழில் மேற்கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது. அந்த தடையால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் மீனவ குடும்பங்களுக்கே இந்த நஷ்டஈட்டு தொகையை வழங்க இருக்கின்றோம். அவர்களின் பாதிப்பு தொடர்பான தகவல்களை மாவட்ட செயலாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்டிருக்கின்றோம். நஷ்டஈட்டு தொகையை அவர்களது வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படும். அந்த நடவடிக்கை இன்றில் இருந்து ஆரம்பிக்கப்படும்.

அத்துடன் கப்பல் தீப்பற்றியதால் ஏனைய பிரதேசங்களில் பாதிக்கப்பட்டிருக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் நாங்கள் நஷ்டஈடு வழங்குவோம். அவர்கள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தொடர்பான தகவல்களை மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கவேண்டும். அவர்களுக்கான நஷ்டஈடு 2 ஆம் மற்றும் 3 ஆம் கட்டமாக கிடைக்கப்பெறும் இடைக்கால நஷ்டஈட்டு தொகையில் இருந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

சுமார் 16 ஆயிரம் மீனவ குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் பாதிப்புக்கு ஏற்றவகையில் நஷ்டஈடு வழங்குவோம் என்றார்.